பக்கம்:உணர்வின் எல்லை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

உணர்வின் எல்லை


'குடமுதற் றோன்றிய தொன்றுதொழு பிறையின்

வழிவழிச் சிறக்கதின் வலம்படு கொற்றம்!'[1]

என மதுரைக் காஞ்சியில், பாண்டியன் நெடுஞ்செழியனை அழகுறப் பாடியுள்ளார்.

வானகத்துச் செல்வங்களில் தணியாக் காதல் கொண்டிருந்த தண்டமிழ்ப் புலவர், மண்ணகத்தின் புகழ் விளக்குவனவாய் அமைந்த ஆறு, பாலை ஆகியவற்றிடத்தும் பேரன்பு பூண்டிருந்தனர். அவர்கள் கொண்டிருந்த அந்த அன்பு வெள்ளம் தக்கோரை வாழ்த்துங்கால் பெருக்கெடுத்து ஓடலாயிற்று.

'பொற்கோட் டியயமும் பொதியமும் போன்றே' [2]
'அயிரை நெடுவரை போலத்
தொலையா தாகநீ வாழு நாளே!'[3]

'கடவு ளயிரையி னிலைஇக்

கேடில வாக பெருமநின் புகழே!'[4]

என்பன புறநானுாற்று உலகிலும், பதிற்றுப்பத்து உலகிலும் நாம் கேட்கும் வாழ்த்தொலிகளாகும்.

வான் பொய்ப்பினும் தான் பொய்யாத் தமிழ்நாட்டு ஆறுகளும், அவை வெள்ளப் பெருக்கெடுத்து விரையும் போது ஏற்படும் எக்கர் மணலும் புலவர்கள் வாழ்த்துரையில் இடம் பெறுகின்றன.


  1. 1. மதுரைக்காஞ்சி, 193.4,
  2. 2. புறம் 2, 3-4;
  3. 3-4; பதிற்றுப்பத்து, 70; 26, 27; 79; 18, 19,
  4. 4