பக்கம்:உணர்வின் எல்லை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

உணர்வின் எல்லை


களைச் சுட்டிக் காட்டுகின்றார்கள் 'பிங்கலம்' போன்ற நூல்களில் வயல் என்ற பொருளுடையதாக மருதம் என்ற சொல் காணப்படுகின்றமையின், வயல்சார்ந்த நிலப்பகுதிக்கு மருதம் என்று பெயர் அமைந்திருத்தல் கூடுமென்றும், மருத மரங்கள் செழிப்புடன் விளக்கும் வளம் சார்ந்த பகுதி ஆதலின் மருதம் என்ற பெயர் வந்ததென்றும், அன்புடைய தலைவனும், தலைவியும் மருவியும், ஊடியும் மனம் மகிழ்தலின் மருதம் என்ற பெயர் பொருந்தியது என்றும் கூறுவர்.

இங்ஙனம் முதல், கரு, உரி ஆகிய முப்பொருளும் காரணமாக அமைந்த -பொருந்திய-மருதம் என்ற பெயர் தாங்கிநிற்கும், நீர்நில வளங்கள் சார்ந்த பகுதியின் அழகினைத் தமிழ்ப்பெருங்கவிஞர்கள் பாடிப் பாடி மகிழ்ந்திருக்கின்றார்கள். பிற்காலப் பெருங்கவிஞராகிய கவிச்சக்கரவர்த்தியார் கம்பருக்குத் 'தண்டலை மயில்களாட, தாமரை விளக்கம் தாங்க, கொண்டல்கள் முழவின் ஏங்க, அவளை கண்விழித்து நோக்க, மகரயாழின் வண்டுகள் இனிதுபாட, தெண்டிரை எழினி காட்ட, அரசு வீற்றிருக்கும் பெண்ணரசியாய்-எழிலரசியாய்க் காட்சியளித்த மருதநிலம், சங்க இலக்கியப் புலவர்களுக்கு எத்துணை எத்துணை இன்பக் காட்சிகளை அள்ளி அள்ளி வழங்கியிருக்கின்றது! நிலத்தின் இயல்போடு மாந்தர் மனத்தின் இயல்பையும் பிணைத்துப் பிணைத்துப் பாடும் பெருமைசான்ற சங்கக் கவிஞர்கள் மருத நில வளம் குறித்தும், அப்பகுதியில் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் மனவளம் குறித்தும் பாடி