பக்கம்:உணர்வின் எல்லை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவர் இலக்கியம்

1175

நூறு ஆண்டுகட்கு—பதினாறு நூற்றாண்டுகட்கு—தமிழகத்தில் நிலவியது. அக்காலத்தில் பல்வேறு சமயங்களையும் சார்ந்த பாவலர் பெருமக்கள், தொண்ணூற்றறு வகைப்பட்ட சிற்றிலக்கியங்களாகிய பிரபந்தங்களை ஆயிரக்கணக்கில் பாடிச் செந்தமிழ் மொழி செழிக்கச் செய்தனர். அப் பிரபந்தங்களுள் ஒன்றாய்க் கருதப்பெறும் பெருமை வாய்ந்ததே ‘உழத்திப்பாட்டு’ என்றும், ‘பள்ளு’ என்றும் சிறப்பித்துக் கூறப்பெறும் இலக்கியம்.

இயல் இசை நாடகம் என்னும் மூன்றன் சுவையும் முக்கனியின் சுவையென ஒருங்கே அமைந்த இலக்கியங்களாகிய பள்ளுப் பிரபந்தங்கள், தமி ழிலக்கியத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தவை. உழவர் இலக்கியமாய் விளங்கும் இந்நூல்கள், பாமரர் வாழ்வைப் பண்டிதரும் சுவைக்கும் வகையில் பேசுவன. உழவர் வாழ்வையும் உணர்வுகளையும் உள்ளவாறு எடுத்தோதும் இந்நூல்கள் பல, 17-ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு தமிழ் மொழியில் நூற்றுக்கணக்கில் தோன்றின. அவற்றில் ஒரு சிலவே இப்பொழுது கிடைக்கின்றன. முக்கூடற் பள்ளு முதல், அண்மையில் யான் வெளியிட இருக்கும் மோகனப்பள்ளு என்ற பழையதொரு பள்ளு நூல்வரை எத்தனையோ பள்ளு நூல்களைத் தமிழ்ப் புலவர்கள் விரும்பிப் பாடியுள்ளனர். அவை யாவும் உழவர் இலக்கியங்களே. தமிழ் நாட்டு உழவனின் பயிர்த்தொழிற் புலமையையும் அழகுணர்ச்சியையும், வாழ்க்கைச் சிக்கல்களையும், பல்வேறு கோணங்களிலும் இருந்து விளக்கும் பான்மையயன இப்பள்ளுப் பிரபந்தங்கள்.