பக்கம்:உணர்வின் எல்லை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருயிர் மருந்து

21

உலக வரலாற்றிலேயே, அல்லற்பட்ட ஆருயிர் மக்கட்கு அன்பு காட்டிய குற்றத்திற்காகச் சிறைப்பட்ட முதற்பெண், தமிழ்க் குலம் தந்த மணிமே கலையே. அறம் வளர்த்த அன்னையின் வாழ்விற்கு அணிசெய்யும் இவ்விருபெரு நிகழ்ச்சிகளையேனும், ஆசிரியர் சாத்தனார், அற்புதத்தின் துணை அணுவளவும் இன்றிச் சித்திரித்துள்ள புலமைத்திறம் போற்றற்குரியது!

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு சாத்தனார். எழுதிய பெருங்காப்பியம், எவ்வளவோ முன்னேற்றங்களைக் கண்டுவிட்ட மனித சமுதாயத்திற்கு இன்றும் சில அடிப்படை உண்மைகளை நினைவூட்டத் தவறவில்லை. கலைஞர் மாரிஸ் (William Morris), பேரறிஞர் கார்ல் மார்க்ஸ் (Karl Marks) போன்ற பெருமக்களின் வாழ்வையும், வாழ்க்கையையும் கண்டு, கேட்டு உணர்ந்த பின்னரும், ஒப்பிட்டுக் காணும்போது, மணிமேகலையின் ஒளி மழுங்கிவிடவில்லை.

இலக்கியம் என்பது வெற்றெழுத்துகளின் கூட்டமன்று; சொல்லோவியங்களைச் சேர்த்து வைத்திருக்கும் கலைக்கூடமும் அன்று; கவிஞன் தன் காலத்தில் கண்ட மக்களின் வாழ்வில் எழுந்த பெரியதொரு போராட்டத்தை உள்ளபடி எடுத்துக் காட்டி, ‘முன்னேறும் மனித சமுதாயம்’ என்ற கப்பல், காலப் பெருங்கடலில் கண் தெரியாமல் சென்று, துன்பமென்ற பாறையில் மோதிச் சுக்கு நூறாகாமல், அதற்கு ஒளி காட்டி, வழிகாட்டும்