பக்கம்:உணர்வின் எல்லை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலமையும் கருணையும்

81


குழந்தைகளைக் கொல்லும் காட்சியை நினைக்கவும், சொல்லவும் கூசியவராய், 'கூறவேண்டுவதெல்லாம் கூறிவிட்டேன் ; இனி நீ விரும்பியது (வேட்டது) செய்க!' எனக் கூறிய அவ்வருட்சான்றோரின் நெஞ்சப் பான்மையை என்னென்பது! 'ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறுாஉம்' தாயினும் சிறந்த சான்றோராய் அன்றோ கோவூர் கிழாரை, அவர் சொல்லும் செயலும் வாழ்வும் வழியும் நமக்கு விளக்கி வைக்கின்றன ! புலவர் பெருமானாருடைய பொன்மொழிகள், புவியாள் வேந்தன் நெஞ்சில் குடிகொண்டிருந்த தன்னலப்பேயை ஓட்டின, பகைஎனும் நச்சுணர்வு தலைக்கேறி அறிவு கெட்டிருந்த அரசன் திருந்தினான் ; குழந்தைகளும் உய்ந்தன; சோழர் குடியின் புகழும் உய்ந்தது; தமிழ் மன்னனது தலை நிமிர்ந்த பெருமையும் தரைமட்டம் ஆகாது தப்பியது. தமிழ்ச் சான்றோரின் அருள் நெஞ்சமும் - கருணை மொழிகளும் - திருத்தொண்டும், மன்பதையின் உள்ளத்தை-உயிரை-உருக்கின. ஆம்! தமிழ் வென்றது! அவ்வெற்றியின் பயகைச் சங்ககாலத் தமிழ் மக்களின் உள்ளக் கோயிலில் எல்லா உயிரும் கைகூப்பித் தொழத்தக்க கண்கண்ட தமிழ்த்தெய்வமானார் கோவூர் கிழார்.