பக்கம்:உத்தரகாண்டம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    103

யில் வீடுகள் இல்லை. ஆடுமாடு உள்ளே நுழையாதபடி கம்பி வேலி இருக்கிறது.

இவள் அங்கிருந்தே பார்க்கையில் கார் ஒன்று, வாசலில் வந்து நின்றது தெரிந்தது. ‘மண்ணாங்கட்டி’ ஓடி வந்து கம்பிவேலிக்கு அப்பால் நின்று அவளை அழைத்தான்.

கூழையான கூலிக்காரன். பெரிய சாலையில் உள்ள ரேசன் கடையில் மூட்டை சுமப்பவன். அவனுடைய பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது ‘மண்ணாங்கட்டி’ என்ற பெயரில் அவன் சந்தோசமடைந்தது போலவே சிரிப்பான்.

“யம்மா? உம் மக வந்துகிறாரு!” அவள் டக்கென்று நிமிர்ந்தாள் “யாரு, யாரப்பா சொல்றீங்க?”

“ஆமாம்மா, தமிழ் புரவலர், இளவழுதி அய்யா... பிள்ள நிலாப் படம் போடு போடுன்னு போடுதல்ல? இவருதானே பாட்டு கதை வசனம் எல்லாம்?... வந்துகீறாரு...!”

அவளுக்குச் சொல்லத் தெரியாத ஒரு குழப்பம். வீட்டுப் பக்கம் போகலாமா, வேண்டாமா என்று நின்றாள். அவளைப் பொறுத்த மட்டும் புருசனால் வந்த புள்ளை குட்டி உறவுகள் இல்லாமலாகிவிட்டன. ஏனெனில், பஞ்சமி இந்தக் கலவரங்கள் நிகழ்ந்த போது மூன்றாவதாகக் கருப்பமாக இருந்தாள். முதல் இரண்டு தரம் கருவுற்று கலைந்து போனதால், மூன்றாவதாக அவள் கருவுற்ற போது, தாய் வீட்டுக்கே வரவில்லை. பாப்புவுக்குப் பெற்றோர் இல்லை. ஒரு அண்ணன் திருச்சியில் பாலக்கரையில் கடை வைத்திருந்தான். அவன் சம்சாரம் பெரியாசுபத்திரியின் உதவியாளராக இருந்தாள். இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் அவன் சின்னம்மாவும் இருந்தார்கள். அங்கே பிரசவத்துக்குப் போனாள்.

எட்டுமாசத்திலேயே நஞ்சுக்கொடி முதலில் வந்து, அவளும் பிழைக்கவில்லை, பிள்ளையும் பிழைக்கவில்லை. தந்தி வந்து, அவள் பதறப்பதறப் போனாள். பயனில்லை. நல்ல மருமகன். அதற்குப் பிறகு அவன் கல்யாணமும் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/105&oldid=1049629" இலிருந்து மீள்விக்கப்பட்டது