பக்கம்:உத்தரகாண்டம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148   ✲   உத்தரகாண்டம்

வச்சாங்க?” என்று கேட்பாள். தங்கவேலு மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருப்பான். “மி...மீன்..” என்று வார்த்தை வருமுன் “டேய்” என்பான் தங்கவேலு.

“...இல்ல...மு முருங்கக்காய்க் குளம்பு” என்று பொக்கைப் பல்லைக் காட்டிச் சிரிப்பான். அம்மா அவன் வாயைத் துடைத்துவிட்டு, கன்னம் கிள்ளி முத்தம் கொஞ்சுவாள்.

மரக்கறி உணவு, அப்படி நாகரிகப் பண்பாட்டின் அடையாளமாக இருந்தது.

ஆனால் அதே அம்மாவின் அண்ணன்மார், அப்போது ஆடும் கோழியும் சாப்பிடுபவர்கள் என்ற உண்மை அம்மாவின் சொற்களில் தெறித்துவிழும். “இங்கே நான் தீட்டாக்கி, குலாசாரம் கெடுக்கிறேனாம், பெண்ணைக் கூட்டிட்டுப் போறான்! இவன் வீட்டில பெரிய துரைக்கெல்லாம் ‘தீர்த்தம் பிரசாதம்’ கொடுக்கும் பார்ட்டியப் பார்த்துப் பழகட்டும்?” என்று கடுகடுத்தாள். அந்த புருசன் தாமுவுக்கும் இதெல்லாம் இருந்திருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கடைசியாகச் சொன்ன சொல்...

‘ஆம்புள பொம்புளய, இவதான்னு ஓங்க முடியாம, நீ பொம்புள பொம்புளன்னு... ஒடுக்கிடுவான்’ என்று தானே சொன்னாள்? இத்தனை படிப்புப் படித்து, வேலை செய்து சம்பாதித்து, என்ன உசத்தி வந்திருக்கு? என்ன மதிப்பு வந்திருக்கு?...

அவள் புருசன்... எத்தனையோ வகைகளில் வேறுபட்டான். எல்லோரையும் போல் வெள்ளையும் சள்ளையுமாகப் போட்டுக் கொண்டு மதிப்பாக இருக்க வேணும், வாழ்க்கையை அனுபவிக்க வேணும் என்ற ஆசைதான். அவன் கிராமத்தில் செய்த அதே வேலையை நகரத்துக்கு வந்தும் செய்கிறான். எட்டாவது தேறியிருக்கிறேன். இந்தப் படிப்புக்கு ஒரு கவுரவ வேலையில்லையே என்று குறைபட்டுக் குடிபழகினான். அது கூடச் சேர்வார் சரியாக இல்லாததனால். ஆனால், அவன், அவளை மறந்து எந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/150&oldid=1049987" இலிருந்து மீள்விக்கப்பட்டது