பக்கம்:உத்தரகாண்டம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200   ✲   உத்தரகாண்டம்


இரவு முழுவதும் துணுக்குத் துணுக்காக நினைவுகள், மயக்கமா, கனவா என்று புலராத காட்சிகள்.

ராதாம்மா பம்பாயில் ஸ்டேஷசனில் வாங்கிக் கொடுத்ததாகக் குழந்தை விக்ரம் ஒரு பூதக்கண்ணாடி கொண்டு வந்திருக்கிறான். அந்தக் குழாயில் பொருந்திய கண்ணாடியில் கண்ணை வைத்துத் திருப்பிக் கொண்டே இருந்தால், அழகழகாக, புதிசு புதிசாக கோல மாதிரிகள் வருகின்றன. வண்ண வண்ணக் கோலங்கள்.

“பாட்டி, பயாஸ்கோப் பாக்குறீங்களா ?...” அவள் கண்களில் பொருத்தி, குழந்தையே திரும்புகிறான்.

தொடர்ச்சியாகத் தெரியவில்லை. பையனில்லை. அவளே வைத்துப் பார்த்துவிட்டு வைத்து விடுகிறாள். குரு குலக்குடிலில், அது இருக்கிறது. அவள் பிள்ளை... படிப்பவன், “அக்கா, சோறு வை!” என்று வருகிறான்... பஞ்சமி தான் தையல் இலை போட்டு, பொங்கல் போன்ற சோற்றை வைக்கிறாள். அவன் எழுந்து காலால் இடறுகிறான்.

“இது என்ன சோறு? ஒரு முட்டை கிட்டை பொரிச்சு வய்க்கிறதில்ல? மனசுக்குள்ள பாப்பாரசாதின்னு நினப்போ? ஆதிக்க சாதி - திராவிடக் குடிமக்களை மிதித்துக் கொக்கரிக்கும் சாதி...” என்று அந்தக் குழாயைத் துாக்கி எறிகிறான். அது உடைந்து சிறுசிறுவெனும் கண்ணாடித் துண்டுகளாகச் சிதறுகிறது.

“அய்யோ...” என்று கண்விழிக்கிறாள்.

சட்டென்று எழுந்து உட்காருகிறாள்.

கனவா... கனவு...? பஞ்சமி இல்லை. ராதாம்மா இல்லை, குடில்வாழ்வு எதுவுமில்லை. அந்தக் குழாய் கண்ணாடி, குழந்தை வைத்து விளையாடியது உண்மை. அது கீழே விழுந்து உடையவில்லை. விக்ரமே காகிதங்களை உரித்து, கண்ணாடியை வெளிப்படுத்திவிட்டான். பிறகு பொருத்த முடியவில்லை. வெறும் கண்ணாடித் துண்டுகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/202&oldid=1050082" இலிருந்து மீள்விக்கப்பட்டது