பக்கம்:உத்தரகாண்டம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   213



ஆஸ்பத்திரியிலும் அந்த நேரத்தில் கெடுபிடி தெரியவில்லை. ஒரு பழைய வீடுதான். நுழைந்ததும் கூட மறைப்பில் தட்டி போல் ஒரு தடுப்பு. ஒழுங்கை போல் பின்புறம் செல்லும் இடத்தில் ஒரு கட்டிலில், நோயாளிப் பெண் படுத்திருக்கிறாள். சொட்டு இறங்கும் அந்த நிலையருகில் ஒரு பெண் கவலையுடன் நிற்கிறாள். பெஞ்சியில் வரிசையாக நோயாளிகளோ உறவினர்களோ குந்தியிருக்கின்றனர். எங்கோ ஒரு குழந்தை வீரிட்டுக் கத்தும் குரல் செவியில் விழுகிறது.

மருந்தகமும் உள்ளே இருக்கிறது. அருகில் உள்ள திட்டி வாசலில் சுப்பய்யா தலை நீட்டி “ஒரு நாய்கடி கேஸீங்க. ஊசி போடணும்” என்று சொல்வது செவியில் விழுகிறது.

“வளர்ப்பு நாயா, தெரு நாயா?” என்று நர்ஸ் கேட்கிறாள்.

“தெரியல. ஆனால் அது கோயில் நாய்!”

“என்னய்யா? வெளயாடுறியா? கோயில்ல நாய் வளக்கிறாங்களா?”

“ஏன், கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “அது சொறிநாய், வெறிநாய்...” என்று முடிக்கிறான்.

அவள் அவன் சட்டையைப் பற்றி இழுக்கிறாள். “ஒண்ணும் வாணாம்பா!”

“அப்ப, அந்தப்பக்கம் போயி சீட்டுப் போட்டுட்டு வாங்க. அஞ்சு ஊசி போடணும்; ஆயிரம் ரூபாய் ஆகும்.”

“இப்பவே அஞ்சு ஊசியும் போட்டுடுவீங்களா? ஆயிரம் ரூபாயும் குடுத்திட...?”

“என்னய்யா, எகன முகனயா பேசுறீங்க. இவ்வளவு ஆகும்னு சொன்னேன். சொறிநாய், வெறிநாய்னு சொன்னீங்க. அஞ்சு ஊசி போட்டாத்தான் பத்திரம். இப்ப முதல்ல முந்நூறு கட்டிட்டுச் சீட்டு வாங்கிட்டு வாங்க!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/215&oldid=1050148" இலிருந்து மீள்விக்கப்பட்டது