பக்கம்:உத்தரகாண்டம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216   ✲   உத்தரகாண்டம்


அவள் வண்டியில் இருந்து இறங்குகிறாள்.

“த...சூ...” என்று கை ஓங்கிப் பன்றிகளை விரட்டுகிறாள்.

இடுப்பில் இருந்த சாவியை எடுத்துக் கதவைத் திறக்கிறாள். வீட்டில் அடி வைத்ததுமே, வயிறு கூவுகிறது.

“உள்ள வாங்க... வாப்பா...” என்று திருத்திக் கொண்டு, பின் புறமிருந்து துடைப்பம் எடுத்து வந்து முன் வாசல் அலங்கோலங்களைப் பெருக்குகிறாள். அந்த வாழைக் கழிவுகளை உண்ணும் மாடுகளில் கொல்லையில் கட்டப்பட்டிருந்த செவலையும் இருக்கிறது. இவளைக் கண்டதும் அது தானாக வீட்டுப் பக்கம் போகிறது. உள்ளே வந்து பின்புறக்கதவைத் திறந்து அழைத்துக் கொள்கிறாள். சேலை நுனியில், இரத்தக் கறை தெரிகிறது. கசக்கியும் முழுதும் போகவில்லை.

வேறு சேலை மாற்றிக் கொண்டு, அடுப்பைப் பற்ற வைக்கிறாள். அரிசியைக் களைந்து வைத்துவிட்டு, சேலையை சோப்புப் போட்டுத் துவைத்து உலர்த்துகிறாள். அரைமூடி தேங்காய் இருக்கிறது. அதை நசுக்கி வற மிளகாய், புளி வைத்து அறைக்கிறாள்.

சமையலை முடித்துவிட்டு அவள் வெளியே வந்து பார்க்கிறாள். மாடிப்படி அறை பூட்டி இருக்கிறது. கூடத்தில், வெளித்திண்ணையில் இல்லை. எங்கே போய்விட்டான்?

பக்கத்து மனைக்கட்டில் செங்கல் வந்து இறங்கி அடுக்கி இருக்கிறார்கள். தெருவில் கம்பி கொண்டு போகும், சிமிட்டி மூட்டை சுமந்து செல்லும் ஏதேதோ வண்டிகள் செல்கின்றன.

“எங்கே போனான், சொல்லாமல் கொள்ளாமல்? ஆனால், எங்கிருந்து எப்படி வந்தான்?...”

சூனியமாக இருக்கிறது கனவா, நிகழ்வா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/218&oldid=1050153" இலிருந்து மீள்விக்கப்பட்டது