பக்கம்:உத்தரகாண்டம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240   ✲   உத்தரகாண்டம்

தடவிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவன் ஏழரைக்குச் சென்றுவிட்டு, பதினொன்றரை இடைவேளையில் வந்திருந்தான். காலை உணவு எதுவும் தயாரித்திருக்கவில்லை. சில நாட்களில் நேரமாகிவிவிட்டால், இந்த நேரத்தில் ஏதேனும் ‘கிச்சடி’ தயாரித்து உண்டுவிட்டு இரண்டு மணிக்குப் போவான்.

அவன் வரும்போது, ஸ்டவுக்கு எண்ணெய் வாங்கி வருவதைப் பார்த்து, “தம்பி? என்ன, இப்ப வரீங்க?” என்று கேட்டாள்.

“இல்லீங்க, ஸ்டவ் எண்ணெயாயிட்டுது. அதான் வாங்கிட்டு வந்தேன்...”

“அடாடா, நீங்க ஏன் சிரமப்படுறீங்க?... எங்க வீட்டுல எண்ணெய் இருக்கு. இங்க காஸ் அடுப்பானதால, எண்ணெய் உபயோகமில்ல. ஹீராகிட்ட சொன்னா, வாங்கிட்டு வாரா, கார்டுதான். ஆமாந் தம்பி, நா கேக்குறேனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க, தனியா சமச்சி சாப்பிடுறீங்க...? வீட்ல... யாரும் இல்லியா?... பொறந்த வூட்டுக்குப் போயிருக்காங்களா?... இல்லாட்டி இப்பதா, புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரும் வேலை செய்யிறாங்க. ஒரே எடத்துல இருக்க முடியாம...”

“...சே, சே அதெல்லாம் இல்லம்மா. நான் தனி ஆள்...” என்று சொல்லிவிட்டு விடுவிடென்று மேலேறி வந்து விட்டான். இப்படி ஆரம்பித்து அந்தம்மாள் அதிகமாகப் பேச்சுக் கொடுக்கலானாள்.


“தம்பி, செத்த நில்லுங்க...” குழந்தை பவானி ஒரு டப்பியை எடுத்து வந்து கொடுக்கும்.

“இன்னிக்குப் பொங்கல்... உள்ள வாங்க... ஏனிப்படி ஒட்டிக்கிடுமோன்னு போறீங்க?...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/242&oldid=1050245" இலிருந்து மீள்விக்கப்பட்டது