பக்கம்:உத்தரகாண்டம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74   ✲   உத்தரகாண்டம்

பயந்து மிரண்டு தடுக்கித்தாவ, அது சக்கரத்தில் அடிபட்டுச் செத்தது.

“அடாடா... ஸாரி, ஸாரிம்மா...” என்று வண்டியை நிறுத்தி இறங்கினான், சிவலிங்கம்... சிவலிங்கம்தான் இப்போது சென்றவன். சட்டென்று நினைவு வருகிறது. அன்று கன்றை நசுக்கிய போது இப்படித்தான்... அவன் கோலத்தைப் பார்த்த போது ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அய்யா படுத்திருந்த நாட்களில், ஒரு வெள்ளிக்கிழமை பஜனையின் போது வந்தமர்ந்தான். அந்த சிவலிங்கம், மாறி மாறித் தோன்றுகிறான்.

“பையன் யாரு? ஏம்ப்பா? எங்க படிக்கிற?”

“இங்கதான் ஸார், நகராட்சி ஸ்கூலில. அப்பா அம்மா யாருமில்ல. பாத்திரக் கடையில வேலைக்குன்னு வந்தேன். அவங்க வீட்டு மாடில தான் கடைப் பையன்களுக்கு சமையல் சாப்பாடெல்லாம். ஊரில நைன்த் படிச்சிட்டிருந்தேன். அப்பதா எங்க பாட்டியும் செத்துப் போச்சி. இங்க வேலைன்னுதான் அழச்சிட்டு வந்தாங்க. ஆனா எனக்குப் படிக்கணும்னு இருக்கு... ஹெல்ப் பண்ணுங்க ஸார்!” என்று அப்படியே காலில் விழுந்து, காலைப் பற்றிக் கொண்டான்.

“டேய், எழுந்திரு. இங்க வீட்ல இருந்திக்க! தாயம்மா. இவ இங்கியே இருக்கட்டும். வீடு எவ்வளவு பெரிசு? உனக்கு இடமிருக்கு நல்லா படி!” என்று தட்டிக் கொடுத்தார். அந்த வருசம் முடிந்து பத்தில் எட்டு முன் அவர் இறந்து போனார்.

அய்யா, அய்யா என்று விழுந்து புரண்டான். “பையன் இங்கேயே இருக்கட்டும் தாயம்மா? உனக்கு ஒரு ஊன்று கோலா இறைவன் அனுப்பி இருக்கிறான். “தம்பி, அப்பா அம்மா இல்லேன்னு நினைக்காதே. நீ நல்லபடியா, புதுப்பயிரா வளரணும். இந்த அரசியல் சேற்றிலும் நல்ல பயிர் வரும் என்று நம்புறேன். உழைச்சுப் பிழைக்கணும்; பொய், சூது எதுவும் ஒட்டக்கூடாது...” என்று அவன் தலையில் கை வைத்து, ஏதோ ஓர் அமைதி வந்தாற் போல் பேசுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/76&oldid=1049531" இலிருந்து மீள்விக்கப்பட்டது