பக்கம்:உத்தரகாண்டம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92   ✲   உத்தரகாண்டம்


‘வாம்மா, என்ன விசயம்? குடமும் கையுமா வந்திருக்க?”

“ஒரு குடம் தண்ணி எடுத்திட்டுப் போறம்மா? பாவம், நா, வேல செய்யிற வூட்டுல கெணறு வத்திப் போயிடிச்சி. அய்யா வேற துபாயிலிருந்து வராங்க. இந்த வருசம் புதுசாக் கட்டின வூடெல்லாம் கெணறு வத்தி தண்ணியில்லாம போச்சு. ஒரு மழ பெய்யல. தூரு வாருனா தண்ணி ஊறும்னு, சுகுணா ஸ்டோர்ஸ் காரங்க வூட்டுல வாருணாங்க. உள்ளதும் போயிட்டது. போர் போடுறாங்க. லாரி தண்ணி தா ஒரு வாரமா வாங்குறாங்க. குடிக்க ஒதவாது...”

“யாரு, அன்னக்கு, புள்ளய ஸ்கூல்லேந்து அழச்சிட்டுப் போனியே அந்த வூடா?”

“ஆமாம்மா. பங்களாவூட்டுக் கெணறு, எப்பவும் வத்தாது. தோட்டக்கெணறு. அத்த இடிச்சி ஃபிளாட் கட்டுறாங்க. அந்தப் பக்கம் காஞ்சிபுரம் ரோடு வருதாம். இடிச்சவங்க, முதல்ல கேணில கண்டதையும் போட்டுத் தூத்துட்டாங்க... கொடும...”

“சரி, சரி, நீ தண்ணி எடுத்திட்டுப் போ?”

ராட்டினம் கிரீச் கிரீச் சென்று சத்தமிடுகிறது.

“சொர்ணம், எண்ணெய்த் துணி கொண்டாரேன், கொஞ்சம் போடு. கேணிச் சுவரில ஏறிப் போட பயமாயிருக்கு. நின்ன வாக்குல எட்டல...”

உள்ளே சென்று, விளக்கெண்ணெய்க்குப்பியை எடுத்து ஒரு கிழிந்த துணியில் ஊற்றிக் கொண்டு வருகிறாள். சொர்ணம் தண்ணீரைக் குடத்தில் ஊற்றி, அதில் ஒரு மூடியைப் போட்டு அப்பால் வைத்துவிட்டு ஏறி நின்று எண்ணெய் போடுகிறாள்.

“பத்திரம்மா, பத்திரம்...”

கீழே இறங்கி, சோப்புத்துண்டைத் தடவிக் கையைக் கழுவிக் கொள்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/94&oldid=1049613" இலிருந்து மீள்விக்கப்பட்டது