பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இந்தக் குறட்டை வந்து இதமாக இடம் பிடித்துக் கொள்கிறது.

இதை எப்படிப் போக்குவது? சளி நீங்கிவிட்டால் சட்டென இந்தக் குறட்டையும் போய்விடும். வெந்நீரில் விக்ஸ் வேப்பரப் அல்லது அதற்கிணையான மருந்தினைப் போட்டு, வேது பிடித்தால், சளி போய்விடும். அதாவது படுக்கைக்குப் போகுமுன், இப்படி செய்துகொண்டால், உறங்குவதற்கு சுகமாக இருக்கும், குறட்டையும் தொடராமல் இருக்கும்.

தூங்குகின்ற சமயத்தில், சளி பிடித்திருப்பதானது மூச்சிழுக்கும் பாதையை தடை செய்து விடுகிறது. தேவையான காற்றைப் பெற முடியாத நுரையீரல்கள் வாய் வழியாகக் காற்றை இழுத்துப் பெற்றுக் கொள்கின்றன.

வாய் வழியாகக் காற்றுப் புகும் பொழுதும் வரும்பொழுதும், வாயின் பின் பகுதியின் மென்மையான அமைப்பில் மோதி உராய்ந்து செல்கிற பொழுது, அதிர்ச்சியிலே அது எழுப்புகின்ற ஒலிதான் குறட்டையாகி விடுகின்றது.

அலர்ஜிகள் ஏற்படும் பொழுது, மூக்கு அடைப் பட்டுக் கொள்ளும். அப்பொழுது இதுபோன்ற குறட்டை ஒலி கொப்பளித்துக் கொண்டும் கிளம்பும், அந்த சமயத்தில் மூக்கு தொண்டை காதுக்கான மருத்துவரை அணுகி, அதனைத் தீர்த்துக் கொண்டால், குறட்டையை எளிதாக விரட்டியடிக்கலாம்.

சில சமயங்களில் மூக்கிற்குள் சதை வளர்ந்தாற்போல் இருப்பதும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது.