பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நிச்சயம் நன்மைதான். நிம்மதியான உறக்கம், அருகில் உள்ளவர்களுக்கு அமைதியான சூழ்நிலை உருவாகி விடுகின்றதல்லவா!

சிலர் இயற்கையாகவே, வாய் வழியாக மூச்சு இழுத்து மூச்சு விடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறட்டை அடிப்பது இயற்கையாகவே நடந்து விடுகின்றது.

சிலர் தூங்கும் போது பெரிதாகக் குறட்டை விடுகிறார்கள். அவர்களுடைய மூச்சுப் பாதை தொய்ந்து தளர்ந்து போவதால், மூச்சு விடும் போது பாதையில் அதிர்வுகள் ஏற்பட்டு. குறட்டை ஒலியாக வெளியாகிறது. மூக்கின் அடிப் பாகத்துக்கும் தொண்டைக்கும் இடையே உள்ள ஜவ்வுகள் (Adenoids) விரிவடைந்தால், அல்லது நாசியில் அடைப்பு ஏற்பட்டால் இது பேரொலியாக வெளிவரும். சிலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்படும்.

இன்னும் சிலர், தங்களது கனத்த உடலின் காரணமாக மல்லாந்து படுத்துக் கொண்டு உறங்குகின்றார்கள். அப்பொழுது அவர்கள் அறியாமல் வாய் வழியாக சுவாசிக்கும் பொழுது குதூகலமாகவே குறட்டை வந்து விடுகின்றது.

இவைகள்தான் காரணம் என்றால், ஒன்று செய்யலாம் மல்லாந்து படுத்து உறங்கும் பழக்கம் உள்ளவர்கள், ஒருக்கணித்து உறங்கினால், குறட்டையைத் தவிர்க்கலாம். மூக்கின் பாதை அடைபடாமல் பார்த்துக் கொண்டால், இந்தக் குறட்டைக் கொடுமையை விரட்டியடிக்கலாம்.