பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


2. மலச்சிக்கல்

ஒருவருக்கு இன்றியமையாத தேவை உறக்கமும் பசியும்தான். வேண்டாததே மனச்சிக்கலும் மலச்சிக்கலும்.

ஆமாம்! மனச்சிக்கல் இருந்து விட்டால் வாழ்க்கையில் மருந்துக்குக் கூட மகிழ்ச்சி இருக்காது. கிடைக்கவும் கிடைக்காது, மகிழ்ச்சியே போய்விட்டால் கவலையும் கலக்கங்களும் காட்டாறு போல வந்துவிடும்! அப்புறம் ஏது உறக்கம் !....

அது போலவே மலச்சிக்கல் வந்து விட்டால், உடலில் நலம் ஏது? பலம் ஏது? நூல்கண்டு கலைந்து சிக்குண்டு விட்டது போல, நாள் முழுதும் நடைமுறைச் சிக்கல்கள் நையப் புடைத்து நலிய வைத்து விடுமே.

ஒரு நாட்டைப் பாதுகாக்க நான்கு படைகள் வேண்டும் என்பார்கள். அது ரத, கஜ, துரக பதாதிகள் என்பது. அங்கு வேண்டாதது ஐந்தாம் படை. அது நாட்டைக் காட்டிக் கொடுத்து அழிக்கும் நச்சுப் பேய்களாயிற்றே!

அதுபோலவே, மன அமைதிக்கு வேண்டாத மும்மலங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பார்கள் (மும்மலம்) என்பது ஆணவம் (அகந்தை), கர்மம் (ஊழ்வினை), மாயை (அறியாமை) அத்துடன் சேர்ந்து இந்த மலமான மலச்சிக்கலையும் நாம் நான்காவதாக சேர்த்துக் கொள்ளலாம். நான்கையும் அகற்றுவதே நமது கொள்கையாகவே இருக்க வேண்டும்.