பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


5. நோயும் வாயும்

நோய் என்றால் துன்பம், வாய் என்றால் வழி, மனிதருக்குத் துன்பம் சர்வ சாதாரணமாக வரும் என்பார்கள். அது வரும் வழியோ ஆயிரம் முறைகளில் என்பார்கள்.

இந்த மானிட வாழ்க்கையையே துன்பம் என்பதைக் குறிக்கவே, பிறவிப் பிணி என்பார்கள். பிறவி வந்த பிறகு பேய்கள் படுத்தும் பாடுபோல, கூடவே வந்து கொடுமைப் படுத்துவன பசிப்பிணி, நலிவுப்பிணி, முதுமைப்பிணி என்பனபோல பலவுண்டு.

வாய் தான் அத்தனைக்கும் வழி என்பார்கள். அனுபவப் பட்டவர்கள் பேச்சுக்கும் அதுதான் காரணம். சொல் வீச்சுக்கும் அதுதான். செயல் வீச்சுக்கும் அதுதான். பலப்பல நேரங்களில் மூச்சுக்கும் வாய்தான் வழியாக இருக்கிறதே. அது படுத்துகின்ற பாடுதான் அகோரமாக விளங்குகிறது.

உடல் என்றால் இரத்தமும் சதையும், எலும்பும் நரம்பும் கொண்ட கூட்டுச் சரக்கு என்பார்கள். இந்த உடலைக் கொஞ்சம் கவனிக்காமல் விட்டுவிட்டால், முதலில் வருவது நாற்றம். அப்புறம் எத்தனை மாற்றம் ஏற்படும் தெரியுமா?

'நல்ல நல்ல' பழக்கம் என்று சொல்லிச் சொல்லிப் பின்பற்றினால்தான், உடலும் நலமாக வாழும், பலமாக வளரும். அதாவது நல்ல உணவு, நல்ல பழக்கம், நல்ல வழக்கம், நல்ல பண்புகள், நல்ல செயல்கள் என்பது போல.