பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

27


நல்ல என்பது அல்ல என்று மாறினால், பொல்லாத நோய்கள் உடலுக்குள்ளே புறப்பட்டு வந்துவிடும். பிறகு என்ன? புலம்பலும் கலங்கலும்தான்.

அதனால் தான், பழம் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது

சம்பத்துடன் பிணியிலே மெலிவதின்,
  நோயற்ற தரித்திரம் நன்று காண்,

பிணியுள்ளவன் என்ன செய்யமுடியும்! மனிதனாகக் கூட. அவனால் உலவ முடியாது. அவனை `செத்த பிணம்' என்றல்லவா இகழ்ச்சியாகப் பேசுகின்றார்கள்.

இந்த சுகத்திற்கு எவ்வளவு மதிப்பும் பெருமையும் இருக்கிறது பாருங்கள்! புத்தரின் போதனை என்ன? ஆசையை அடக்குங்கள் என்று. ஆசைதான் அனைத்திற்கும் காரணம் என்று நீங்களும் அறிவீர்கள். ஆசைதானே முனைப்பாகும் முன்னேற்ற நினைப்புக்கும், ஆற்றலின் இணைப்புக்கும் அன்பின் பிணைப்புக்கும் முன்னோர் காரணம் ! ஆசையில்லாத உயிரினம் எது?

ஆனால் பிணியில் அகப்பட்டவன் பாடோ பிதற்றல் பாடுதானே. சுகம் இல்லார்க்கு ஆசையேது? என்ற ஒரு வாசகம் வேதவாக்காக அல்லவா தோன்றுகிறது.

சுகமாக இல்லாதவனுக்கு ஆசையேயில்லை என்றால் என்ன அர்த்தம்! அவனுக்கு அவ்வளவு துன்பம் என்பது தானே! அதனால்தான் நோயே வேண்டாம், என்கிறார்கள் பெரியோர்கள்.