பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


போன ஆசைகள், கலைந்து போன முயற்சிகள், கடன்கள் விவகாரங்கள், தோல்விகள் எல்லாம் தூங்காமல் படுத்திருப்பவரிடம் வந்து சேர்ந்து படுத்துக்கொள்ளும். அத்துடன் அவரை அப்படியே அழுத்திக் கொண்டு புரட்டிவிடும்.

அழுத்தும் சுமை தாங்கமுடியாமல், அவர் புரண்டு புரண்டு படுத்திருப்பாரே ஒழிய, எவ்வாறு தூங்குவார்?

தூக்கம் வந்த பிறகு, படுப்பதுதான் முறை, அது வரை உழைக்க வேண்டும். முயற்சிகளைத் தொடர வேண்டும். படுத்தவுடன் உறங்குபவருக்கு நிம்மதியான மனம் என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை தெரியுமா?

சும்மா படுத்திருக்கிறேன் என்பது எத்தனை எத்தனை சுமைகளை நெஞ்சுக்குக் கொண்டு வந்து அழுத்தும் தெரியுமா? அதனால்தான், நான் சும்மா கிடந்து உறங்கமாட்டேன் என்கிறார் அவர்.

இந்த நான்கு உபதேசங்களையும் சுருக்கமாகவே விளக்கியுள்ளேன். நீங்களே இதன் மிகுதியான பொருளை மேலும் மேலும் நினைத்து, அனுபவித்து அறிந்து மகிழுங்கள்.

தெளிந்த நீரில் யானை ஒன்று முகம் பார்த்து, அழகு உருவம் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்ததாம். அப்பொழுது தவளை ஒன்று அந்தத் தண்ணீரில் தாவிக் குதித்துக் கலக்கிவிட்டு மகிழ்ந்ததாம். யானை என்ன செய்யும்?

அது போலவே, நல்ல நினைவுகள் தெய்வ சிந்தனை என்னும் தெளிந்த நீரில் நலமான வாழ்க்கை என்ற முகத்தைப் பார்க்க முயலும் போது, அபிலாசைகள் என்கிற தவளை, அதில் வீழ்ந்து கலக்கிக் குழப்பிவிடும்.