பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல் நலக் குறிப்புகள்

33


6. சும்மா இருந்தால் சுகம் வருமா?

நிலை கொள்ளாமல் அலைகின்ற மனதினை அடக்கி, சும்மா இருக்கும் சுகத்தை அருளுமாறு, முற்றும் துறந்த முனிவர்கள் இறைவனிடம் வரம் கேட்டார்கள்.

ஆனால் ஆடி ஓடி வேலை செய்கின்ற உடலையும், அதன் உறுப்புக்களையும் சும்மா இருக்கச் செய்து முழு சோம்பேறியாக வாழ வேண்டுமென்று அவர்கள் கேட்க வில்லை.

வாழ்வைத்தான் அவர்கள் எல்லோரும் பொய், மாயம் என்றார்களே ஒழிய, உடலை அவர்கள் 'மெய்' என்றே கூறினார்கள். மேன்மைமிகு ஆலயம் என்றே மொழிந்தார்கள். உயர்ந்த கோயில், உற்சாகமான பீடம் என்றே உரைத்தார்கள். உலகத்தார்க்கும் உணர்த்தினார்கள்.

ஆனால் இப்பொழுதெல்லாம், வாழ்க்கைமுறை நவீனயுகமாகவும், நாகரீகக்காலமாகவும், நாலாவிதமான கோலமாகவும் மாறிப் போய்விட்டதால், எல்லோரின் மனமும் சற்று மாறித்தான் போய் கிடக்கிறது.

‘வீதியிலே அரட்டை, செய்யும் வேலையிலே அசட்டை, வீட்டிலே குறட்டை' என்பதாக இளைஞர்கள் அலைகிறார்கள். உழைக்காமல் ஊதியம் வர வேண்டும் பேசிக் கொண்டே பொழுதைப் போக்க வேண்டும் என்று முடவன் கொம்புத் தேனுக்காக முட்டி போட்டு உட்கார்ந்த கதையாக, சோம்பேறி நினைவுகள் சுற்றிச் சுற்றி இசைபாட, சுகம் காண முயல்கின்றார்கள்.