பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சும்மா இருப்பதே சுகம் என்பது அவர்கள் நினைவு, 'சும்மா இருந்தால் போதும்' சுகமே வந்து இன்ப முகம் காட்டும்' என்பது அவர்கள் கனவு. அப்படி யென்றால், சும்மா இருந்தால் சுகம் வந்து விடுமா என்ன?

இயங்குவதற்காகத் தோன்றியதுதான் இந்த வாழ்க்கை. இயங்குவதற்காகப் பிறந்ததுதான் இந்த உடல் எந்தக் காலத்திலும் உழைப்பதற்காக உருவானவைதான் இந்த உறுப்புக்கள்.

சும்மா கிடக்கும் இரும்பில் துருபிடிப்பது போல, சும்மா கிடக்கும் உறுப்புகளில், துருவைவிட மோசமான 'குறை' அல்லவா ஊறுகிறது?

ஓடாத நீருக்கு சாக்கடை என்று பெயர். உதவாத மரத்திற்கு உதியமரம் என்று பெயர். இருக்க உதவாத வீட்டுக்கு குட்டிச்சுவர் என்று பெயர். உழைக்க மறுக்கின்ற உடலுக்கு சவம் என்று பெயர்.

சுகமாக இருக்க ஆசைப்பட்டு, சவமாகக் கிடக்கலாமா ! சோம்பித் திரிபவன் தேம்பித் திரிவான் என்பது பழமொழி. ‘இன்றைய சோம்பேறி நாளைய பிச்சைக்காரன்' என்பது தமிழர் பழமொழி. 'சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை' என்பது ஆங்கிலேயப் பழமொழி.

‘எந்த நாட்டிலும், எந்த இனத்திலும் ' எந்தக் காலத்திலும் ‘சும்மா' கிடக்கும் சோம்பேறியை யாரும் மதித்ததுமில்லை. மனிதராக நினைத்ததுமில்லை. அரிய உழைப்பை வெறுக்க முயல்பவன் அழுகல் பழம் போன்றவன். சமுதாயம் எனும் உடலிலே அழுகிய உறுப்பு போன்றவன். பிறகென்ன? அழுகிய உறுப்பை யார் தான் மதிப்பார்? யார்தான் ரசிப்பார்?