பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

35


வீரியம் பெற்று காரியம் ஆற்றுகின்ற மனிதரே, உடலை இயக்கி, உழைப்பைப் போற்றுகின்ற மனிதரே, உண்மையான மனிதராவார். அவர்களைத்தான் நோயே அணுகாது. அவர்கள் வாயும் எதற்காகவும் முனுமுனுக்காது. அதுதான் இயற்கையின் நீதி - நியதி - நிம்மதி.

சரி! சும்மா இருந்தால் சுகம் வராது என்கிறீர்களே. அப்படி சும்மா இருந்தால் என்ன ஆகும் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது!

சும்மா இருந்தால் என்ன ஆகும் என்றால் ... இதோ! இப்படித்தான் ஆகும்!

வேலை செய்யாமல் 'சும்மா' படுத்திருப்பவன் மனம், வேண்டாத கற்பனைகளையும், விரும்பத்தகாத கவலைகளையும், விலா ஒடிக்கும் சுமைகளையும் அல்லவா கூட்டிக் கொண்டு வந்து விடுகிறது. அல்ல, அல்ல. அந்தச் ‘சும்மா மனம்' தேடிப் போய் ஓட்டிக் கொண்டு வந்து விடுகிறது.

அசை போடும் பசுமாடு போல, ஆயிரமாயிரம் குழப்பங்கள் நீர்ச்சுழியாக சுழன்று சுழன்று வர, அவன் திக்கித் திணறிப் போய், சிக்கித்தவிக்க வேண்டியதாகி விடுகிறது.

ஒருவன் படுத்தே கிடக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். உண்ணும் நேரம் தவிர ... அப்பொழுது என்ன ஆகிறது? படுத்தே கிடப்பதால், தோல் பாகம் அழுத்தப்படுகிறது. அதற்குள்ளே இருக்கும் அவயவங்கள் அனைத்தும் அப்படித்தானே ஆகும்!