பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இயங்காத தசைகள் இறுக்கம் தளர்கின்றன. 'கொழ கொழ' என்ற தன்மைக்கு வருகின்றன. எலும்புகள் வலுவிழக்கின்றன. மூட்டுக்கள் பிடிப்பில் விழுந்து விடுகின்றன. உடல் எடையின் அழுத்தம் உறுப்புக்களை நசிவுக்குள்ளாக்குகின்றன. அதன் காரணமாக நலிவுகள் நேர்கின்றன.

இயங்குகின்ற உடலில் ஏராளமாய் தோன்றுகின்ற வேண்டாத கழிவுப் பொருட்களை, வெளியே எறிந்து விடவேண்டுமல்லவா? கழிவுப் பொருட்களைக் கழித்து வெளியேற்றுகின்ற சக்தி படுத்துக்கிடக்கும் உடலுக்கு இருப்பதில்லை. கழிவுகள் உள்ளேயே கிடந்தால், நாற்றமல்லவா எடுக்கும்? கசடுகளே உறுப்புகளையும் உணர்வுகளையும் அழிக்கும்.

உண்ணல் உறங்கல் இதுவே கதி என்றால், உண்ணும் உணவு செரிக்க வேண்டாமா? ஜீரணம் ஆகாமல், வயிற்றுக்குள்ளே தேங்கிக் கிடந்தால், வயிறு மட்டுமா வீங்கும்? வரக்கூடாத வலிகளும் வேதனைகளும் அல்லவா வந்து தேங்கும்? பிறகு? மலச்சிக்கல், மூலக் கோளாறுகள், முடியாத வாயு தொல்லைகள், முட்டிக் கொண்டு வரும் அவதிகள் - இத்யாதிகள் என்று தோன்றித் தொடரும் தொல்லைகளுக்கு அல்லவா ஆளாகின்றனர்.

அதிக உழைப்பு எப்படி உடலுக்கு ஆகாதோ அது போலவே அதிசோம்பேறித்தனம் உடலுக்கு எள்ளத்தனையும் ஆகாது. அதிக சோம்பேறித்தனமான 'போர்' என்பது உடம்புக்கு எப்படி ஆகாதோ, அதுபோலவே, அதிக உடற்பயிற்சியும் உடம்புக்கு ஒத்துவராது.