பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல் நலக் குறிப்புகள்

37


நல்ல உழைப்புதான் மனதை 'சும்மா' நிறுத்திவைக்கும். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைதான் மனதை சும்மாவே அடக்கி வைக்கும். காற்றாடியாகப் பறக்கின்ற கனவுகளை இழுத்து வைக்கும்.

ஆகவே, சும்மா இருப்பது சுகமல்ல, நல்ல இலட்சியம் ஒன்றை அமைத்துக் கொண்டு, அதற்காக உழைப்பதுதான் சுகம். அதில் வரும் இன்பமே உண்மையான இன்பம்.

நல்ல இலட்சியம் என்பது, எதிர்கால வரலாற்றில் இனிய ஓர் இடத்தைப் பிடிப்பதுதான்.

இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை தகுதியைத் தந்திருக்கிறான். அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளத்தான் அறிவினைக் கொடுத்திருக்கிறான்.

அந்த அறிவையும் திறமையையும், தான் வாழும் சமுதாயத்திற்குப் பயன்படும் வண்ணம். சூழ்நிலைகளையும் அமைத்திருக்கிறான்.

இருக்கும் திறமையைத் தானும் பயன்படுத்தாமல், பிறருக்கும் கொடுக்காமல் சும்மா கிடப்பது, சோம்பேறியாய் இருப்பது எவ்வளவு பெரிய துரோகம்?

உழைப்பே உயர்துணை,உழைப்பவன் உயர்திணை, உழைப்பே நன்னிலை, உழைப்பே சிறந்த கலை என்று உணர்ந்து உழைக்க முன் வருபவர்கள். தானும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். சுற்றி இருப்பவர்களையும் மகிழ்வுடன் வாழ விடுகிறார். அந்த இனிய மனமும், இயல்பான உழைப்பும் உங்களை என்றும் வளமாக வாழவைக்கும்! ஆமாம். நிச்சயமாக!