பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




7. அல்சர் விளக்கமும் தடுப்பும்

அல்சர் என்றால் என்ன?

வயிற்றுப் பகுதியில் அல்லது சிறுகுடற் பகுதியில், அதிக அமிலத்தினால் ஏற்படுகின்ற குடற்காயத்தினால் விளைகின்ற வயிற்று வலிக்குத்தான் அல்சர் என்று பெயர்.

ஏன் ஏற்படுகிறது?

வயிற்றைச் சுற்றிலும் அமைப்பாக உள்ள செல்கள், உணவினை ஜீரணம் செய்வதற்காக, பெப்சின்ஸ் மற்றும் ஜீரண அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. நாம் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், நாம் உண்ணுகின்ற நேரங்களில் மட்டுமே அவை ஜீரண அமிலங்களை சுரக்கின்றன. அப்பொழுது, உணவை சரியான நேரத்தில் ஜீரணம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. எந்தவிதத் தொந்தரவும் ஏற்படுவதில்லை.

மூளையுடன் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த வயிற்று நரம்புகள், சில சமயங்களில் வேகமாக வேலை செய்யத் தொடங்கி விடுகின்றன. அதாவது, நமக்குப் பசியெடுக்கும் பொழுது அல்லது உண்ணும் உணவினைப் பார்க்கும் பொழுது அல்லது உணவைப் பாராத நேரத்தில் வாசனையை நுகரும்பொழுது, அல்லது நாம் கோபமாக இருக்கும் பொழுது அல்லது எதையாவது, யாரையாவது எதிர்பார்த்து பதட்டப்படும் பொழுது இந்த நரம்புகளில், அமிலங்களை அதிகமாக உற்பத்தி செய்யுமாறு தூண்டி விடுகின்றன.