பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல் நலக் குறிப்புகள்

39


நாம் அடிக்கடி உணர்ச்சி வசப்படும் பொழுது ஆங்காரம் கொள்ளும் பொழுது வயிற்றிலே அதிக ஜீரண அமிலங்கள் ஊறித் தேங்கிக் கொள்கின்றன. அங்கே ஜீரணிக்க உணவு இல்லாததால், அந்த வேகம் கொண்ட அமிலங்கள், குடலையே கரைக்கத் தொடங்கிவிடுகின்றன.

அந்தக் குடற்காயமே வயிற்றுவலி என்கிற அல்சராக மாறி அனவைரையும் ஆட்டிப்படைத்து விடுகிறது.

யார் யாருக்கு வரும்?

அல்சர் யார் யாருக்கு வரும்? ஆண் பெண் சிறுவர் சிறுமி, குழந்தைகள் என்று பாகுபாடின்றி அனைவருக்கும் அல்சர் வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தக் குடல்வலி வியாதிக்கு யாருமே விலக்கல்ல. சிறு குழந்தைகள்கூட இதனால் பாதிக்கப்படலாம். இந்தியாவில் 3 சதவிகிதமும் அமெரிக்காவில் இதைவிட அதிகமும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். 30 வயதிலிருந்து 65 வயது வரையில் உள்ள ஆண் பெண் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். என்றாலும், பெண்களைவிட, 25 மடங்கு ஆண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக, மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

எப்படி என்ன காரணம்?

அதிகமாகப் புகைத்தல், அதிகமாகக் குடித்தல் அதிகமாகக் கவலைப்படுதல், புகையிலை சுவைத்தல் அதிகமாக ஆஸ்பிரின் பயன்படுத்தல் போன்ற காரணங்களால் இவர்களுக்கு அல்சர் ஏற்படுகிறது.