பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 89 பிறந்து, வாழ்ந்து, இறந்து போவதுதான் வாழ்க்கை யென்றால், அதற்குப் பெயர் மனித வாழ்க்கையல்ல. விலங்கு வாழ்க்கை. ஆமாம். அது ஒரு விளங்காத வாழ்க்கைதான். வந்து பிறந்த மனிதர்கள் எல்லாம் பூமியிலே தங்கி விட முடியாது என்பது நியாயம்தான். வெறும் உடலால் வாழாமல், விம்மிதம் பொங்கும் புகழால் மனிதர்கள் வாழ முடியுமல்லவா! புகழுக்கு இந்தப் பூவுலகத்தில் இடம் இல்லையே என்று மறுத்துவிட முடியுமா என்ன? பொருளார்ந்த வாழ்வுக்கும், புகழார்ந்த மேன்மைக்கும் உடல் நலம்தான் அஸ்திவாரமாகும். அடிப்படை இருப்பிடமாகும். இந்த உலகத்திலேயே அதிசயமான பொருள், அற்புதமான பொருள், விலை மதிக்க முடியாத பொருள் ஒன்று உண்டென்றால், அது உடல்தான். உலகில் உள்ள சிறு சிறு பொருட்களையெல்லாம் நாம் மதிக்கிறோம். துதிக்கிறோம். பெறுவதற்குத் துடிக்கிறோம். பாதுகாக்கப் பலப் பல யுக்திகளை எடுக்கிறோம். பரபரப்பும் அடைகிறோம். ஆனால், உடலைப் பற்றி ஒரு சிறிது நேரம் கூட எண்ணிப் பார்ப்பதில்லையே! எண்ணிப் பார்க்கக்கூட எண்ணிய தில்லையே! ஏன்? இல்லாத பொருளுக்காக ஏங்குவதுதான் மனிதத்தனம். இருக்கின்ற அருமையான பொருளின் பெருமையை அறிந்து போற்றிக் காத்து இன்பங்காணத் தெரியும் ஏற்றமான குணம் இன்னும் மனித இனத்துக்கு வரவில்லை.