பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாவும் மாக்களும் ஐயறிவினவே

மக்கள் தாமே ஆறறிவு உயிரே

என்றான் தொல்காப்பியன். பிற்கால அவ்வையாரும் “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்றார். இதன் விளக்க உரையாக உலக நாடகக் கலைஞன் சேக்குவியர் “ஆ மாந்தன் எத்தகைய திறனமைந்த படைப்பு எத்தனை அறிவாற்றல் எத்தனை எல்லை இலாக் கலைப்பண்பு உருவில் இயக்கத்தில் செயலில் எத்தகை நுண் பேரறிவு உணர்வில் ஓர் இறையுரு ஒப்பான் உலகின் வனப்பெலாம் திரண்ட வடிவம்! உயிரினங்களின் ஒப்பற்ற கொடுமுடி” என்றான்.

தன்னைப் பற்றி உலகின் கற்பனைக் கருத்துருவத்தை உருவாக்குகிற, உண்மையில் வாழ்வு எப்படி இருக்கிறது எப்படி இருக்க வேண்டும் என இரு வழிகளிலும் உலகைக் காண்கிற திறமை மாந்தனுக்கு மட்டுமே உண்டு. எனவே புதிது புதிதாய்ப் புத்தம் புதிதாய்க் கலை, அறிவியல் இரண்டு துறைகளிலும் திரண்டு ஓங்குகிறான்.

மாந்தன் கால ஓட்டத்தில் சூழ்நிலைகளைச் சார்ந்திருக்கின்றான்; சூழ்நிலைகள் மாந்தனால் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நூற்றாண்டுதோறும் புதிய புதிய போராட்டங்களை மாந்தன் சந்திக்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறான். இருட்டை ஒளி அகற்றி விடுவது போல அச்சத்தை அடிமைத் தளையை, அன்புணர்வும் ஆக்க உணர்ச்சியும் அகற்றிவிடுகின்றன. தங்கு தடையற்று இருத்தலையே வழியாகக் கொண்டது வாழ்க்கை. அதாவது முயற்சியற்ற முயற்சியின் உள்ளுணர்வின் வெற்றிப்பாதை அதுவே கலை இலக்கிய வெளிப்பாடு.