பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘எது வாழ்க்கை?’ என்ற வினாவை ஒவ்வொரு புதிய சமூகச் சூழலிலும் புதிய மாந்த வரலாற்றைப் படைப்பதே வாழ்க்கை என்றுணர்ந்தான்.

வாழ்வுணர்வில் வெளிப்பட்ட ஒன்றே பாட்டிலக்கியம். அதன் இலக்கணத்தை கீட்சு என்னும் ஆங்கிலப் பாவலன் “பாட்டின் தலையாய நோக்கம் கவலைகளை ஆற்றவும் உள்ளத்தை உயர்த்தவும் கூடிய தோழனாக இருப்பதே“” என்றான். மாந்த உள்ளத்தில் உணர்ச்சி மிகும்போது பாடல் பிறந்தாலும், பாட்டில் வெளிப்படையாகத் தோன்றும் பொருளைவிட வேறு பொருளும் உண்டு. நம் சங்ககால அகப்பொருள் பாடல்கள் அவ் வகையைச் சார்ந்தவை பண்டை, சீன, யப்பான் பாடல்களுக்கும் இப் பண்பு - உலகில் பலமொழிப் பாடல்கள் வாழ்வியலின் நுண்மையை நோக்கிச் சொல்பவையே. அம்மொழிகளில் ஒன்று பாரசீகம்.

நானிலத்தில் படைப்புயிர் பலவும் ஆண் பெண்ணாக வாழ்கின்றன. அன்புற்றிணைந்து இன்ப்பெருக்கம் செய்கின்றன. உயிரினங்களில் உயர்ந்த சிறந்த மாந்த இனமும் இதில் விதிவிலக்கில்லை. மற்ற உயிர்களுக்கும் தாம்தாம் இணைய ஒரு பருவம் உண்டு. அவை இயல்புணர்ச்சியால் வாழ்வன. மாந்த இனமோ உந்துணர்ச்சியை ஒரு பக்குவப் பட்ட பருவத்திலிருந்து உள்ளுயிர்ப்பின் அகத் தூண்டுதலால் கிளர்ச்சி கொண்டெழுவது. எனவேதான் மாந்தனின் ஆண்பெண் அன்புறவு காதலாக மலர்கிறது. காவியமாகக் கனிகிறது. புணர்ச்சியில் நிறைவும் முழுமையும் புத்துயிர் பெறுகிறது.