பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தெளிந்த தண்ணீர் கொண்டுவந்து அவனுடைய பாதங்களைக் கழுவினான். அப்பொழுது நல்வாழ்த்துக் கூறியபடி ஒரு மனிதன் உள்ளே வந்தான். வெள்ளிய தாடியுடன் கூடிய அந்த மனிதன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். மேன்மைக்குரிய நிசாம் அவர்களால், பாக்தாது நகரத்திலே ஏற்படுத்தப்பட்ட பாக்தாது நிசாமியா என்ற ஆராய்ச்சிக் கழகத்திலே, கணிதப் பேராசிரியராக இருப்பவன் தான் என்றும், தன் பெயர் மைமன் இபின்நஜிப் ஆல்வாஸிட்டி என்றும் கூறினான். உமார் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவனுடைய அமைதியைக் கண்ட மைமன் வியப்புடன் மீண்டும் கரகரத்த குரலிலே பேசத் தொடங்கினான்.

“பேரறிஞர் டோலமி அவர்களின் நட்சத்திர அட்டவணையும், அறிஞர் அலிசென்னா அவர்கள் பயன்படுத்தி வந்த வெண்கலப் பூகோள உருண்டையும் நிசாம் அவர்கள் ஆணையிட்டபடி கொண்டு வந்திருக்கிறேன்” என்றான்.

“நல்லது” என்று உமார் எங்கோ கவனமாகப் பதில் சொன்னான். வெயிலின் வெப்பமும், பாலைவனத்து மணற்குடும் உடலின் காய்ச்சலும் வாட்டியபின் இங்கு வந்ததும் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதியின் இடையே மைமன் கரகரத்தகுரல் என்னவோ மாதிரியிருந்தது.

ஆமையின் முதுகோட்டிலே தவறுதலாக ஏறிவிட்ட நாரைபோல, வெகு வேகமாகப் பின்வாங்கி அந்த இடத்தைவிட்டுச் சென்றான் மைமன் என்ற அந்தக்கணிதப் பேராசிரியன். ஆனால், இரவு நெடுநேரத்திற்குப்பிறகு, கோபுரத்தின் உச்சியிலேயிருந்த தளத்தில் உமார் உலவிக் கொண்டிருந்தபொழுது, அந்த முதிய பேராசிரியன் மைமன் தான் கொண்டு வந்த கருவிகளை நோக்கிச் செல்லாமல் இருக்க முடியவில்லை. அங்கே சென்று, உமார் கவனிக்காமல் இருக்கும்போதே, அந்தப் பூகோள உருண்டையின் நான்கு புறமும் இருந்த விளக்குகளை ஏற்றினான். அந்த உருண்டையின் மேல்பாதியில் வெளிச்சம் படும்படிக்கு அந்த விளக்குகளை ஒழுங்குபடுத்தினான்.

அப்பொழுது, உலாவிக் கொண்டிருந்த உமார் திரும்பிப் பார்த்தான். மெருகேறிய அந்த வெண்கல உருண்டையின் மீது