பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

அவர்கள் மூவரும் அங்கே அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். கீழேயுள்ள ஆழமான பள்ளத்தாக்கில் சின்னஞ்சிறிய மனித உருவங்கள் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தன. தூரத்திலே உள்ள பாறைக் கோபுரத்தில் மாலைக் கதிரவன் தங்க முலாம் பூசிக் கொண்டிருந்தான்.

உமாருக்கு அந்தப் பள்ளத்தாக்கின் பெயர் தெரியும். அதன் பெயர் வாடி ஜெகனம் என்பதாகும். அதாவது பாவிகளின் பள்ளத்தாக்கு என்று பொருள்! எல்லா ஆவிகளையும் அழைத்துத் தீர்ப்பு வழங்கும் நாளன்று எடைபோட்டுப் பார்க்கும் பொழுது, பாவம் செய்தவர்கள் என்று தீர்மானிக்கப்படும் ஆட்களின் ஆவிகள், இந்தப் பள்ளத்தாக்கின் வழியாகத்தான் செல்லும் என்று இஸ்லாமிய முல்லாக்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குக் கீழேயுள்ள சரிவில் விசித்திரமான தோற்றமுடைய கல்லறைகள் பல இருந்தன. கதிரவன் நெருப்புப் பந்துபோல் மாறி செக்கச் சிவந்து விளங்கியது. அதன் செவ்வொளி அந்தப் புனித நகரத்தின் கோபுரங்களில் எல்லாம் சாய்ந்து அழகைப் பெருக்கியது. அவர்களின் அருகிலே, வரிசை வரிசையாகக் கிழவர்கள் நடந்து செல்லும் காட்சி ஒன்று தோன்றியது. அந்தக் கிழவர்கள் ஒருவர் முதுகை ஒருவர் பிடித்துக் கொண்டபடி, தட்டுத் தடுமாறி மேலும் கீழும் தலையைத் திருப்பிக் கொண்டு, கீழேயுள்ள பள்ளத்தாக்கை நோக்கி வரிசையாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் குருடர்கள்.

ஹாஸான் திடீரென்று பேசத் தொடங்கினான். “இதோ கவனியுங்கள். நாம் வானத்தை உற்று நோக்குகிறோம். பூமியை ஆராய்கிறோம். நம் குருட்டுக் கண்களால் இவ்வளவு உண்மையை அறிந்து கொள்ளுவதில்லை”.

“ஏன்? போதுமான அளவு, உண்மைகளை நாம் தெரிந்து வைத்திருக்கிறோமே!”என்றான் அக்ரோனோஸ். “இல்லை. நாம் குருடர்களாகத்தான் இருக்கிறோம். புதையுண்ட எலும்புகளையும் பழைய கற்களையும்தான் நாம் புனிதமாகக் கருதுகிறோம். திருக்குரானிலே அல்லாவே பெரிய கடவுள் என்று கூறப்பட்டுள்ளது. அவரைக் காட்டிலும் பெரிய ஒகு கடவுள் இருந்தால் என்ன வந்துவிட்டது? என்று ஹாஸான் கேட்டான்.