பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

விஷயத்தைக் கண்டுபிடித்தேன். நீதான் அதன் உண்மையை எனக்குத் தெரிவிக்கவேண்டும்” என்றான் உமார்.

“அடிமையாகிய நான் தங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறேன். மேலும் நீண்டநாள் நண்பனாகவும் இருந்த என்னை நீங்கள் கேட்டால், உடனே எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்” என்று டுன்டுஷ் வணக்கத்துடன் கூறினான்.

“நீலக்கல் பதித்த வளையலை எந்த இடத்திலே ஒளித்து வைத்திருக்கிறாய் என்பதையும் அந்த வளையலுடன் கூறப்பட்ட சங்கதி எது என்பதையும் நான் இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டும். சொல்!” என்றான்.

ஒற்றர் தலைவனான டுன்டுஷுக்கு மூளை வேகமாக வேலைசெய்யும் சக்தி வாய்ந்தது. இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அவனுக்கு உடனே, தான் ஊற்றுக் கிணற்றுக்குள்ளே தூக்கி எறிந்த வளையல் நினைவுக்கு வந்தது.

எப்படி, அந்த விஷயம் இவனுக்குத் தெரியவந்தது என்று ஆச்சரியப்பட்டு முதலில் விழித்தான். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டான்.

“தங்களுக்கு நீலக்கல் பதித்த வளையல்தானே வேண்டும்? எத்தனை இலட்சம் வேண்டும் சொல்லுங்கள்; இப்பொழுதே கொண்டு வருகிறேன்” என்று விஷயத்தைப் புரியாதவன் போல் பேசினான்.

“இந்த இடத்திலே, ஒரு விகடன் வந்து உன்னிடம் ஒரு செய்தி கூறி அந்த வளையலைக் கொடுத்தான். அந்தச் செய்தியை நான் தெரிந்துகொள்ளாதபடி நீ மறைத்து வைத்துவிட்டாய். இப்பொழுது செய்தியனுப்பிய அந்தப் பெண் இறந்து போய்விட்டாள். அவளுடைய சாவு என்னுடைய உயிரை வாட்டிக்கொண்டிருக்கிறது. இந்த உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், அவளைத்தான்... அந்த ஒருத்தியைத்தான் நான் காதலித்தேன். அது உனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும், நீ என்னிடம் பொய்கூறியிருக்கிறாய் என்னை ஏமாற்றியிருக்கிறாய் - உண்மைதானே? ஏன் விழிக்கிறாய்?”