பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207

28. மரணக்கொடி பறக்குதென்று மத குருக்கள் ஒலமிட்டார்!

ஓராண்டுகாலம் கழிந்தது. விண்மீன் வீட்டில் இருந்த ஆராய்ச்சியாளர்கள், தங்களுடைய புதிய கண்டுபிடிப்புடன், தினசரி மணிக்கணக்கை ஒப்பிட்டுப் பார்த்து மன நிறைவு பெற்றார்கள். மைமனுக்கும் இஸ்பிகாரிக்கும் மிகுந்த மகிழ்ச்சி, நட்சத்திரங்களின் இருப்பிடத்தைக் கொண்டு, நீர்க்கடிகாரத்தால் அளக்கப்படும் மணிக்கணக்கும், சூரியனுடைய நிழலின் மூலம் அளக்கப்படும் மணிக் கணக்கும் ஒன்றுக்கொன்று ஒத்து வந்தன. இவ்வாறு ஆராய்ச்சி செய்ததன் பலனாக, ஓர் ஆண்டில், 365 நாட்களும் ஐந்து அல்லது ஆறுமணி நேரமும் அடங்கியிருக்கின்றன என்று உறுதியாயிற்று. 354 நாட்களே கொண்ட பிறைக்கணக்கைக் காட்டிலும் இது நிச்சயமாகச் சரியானதென்றே தெரிந்தது. பிறைக் கணக்கில் உள்ள பிழையை உணர்ந்த எகிப்து தேசத்துப் பழங்கால வானநூல் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆண்டுக்கு 30 நாட்கள் கொண்ட 12 மாதங்களை வகுத்துக் கொண்டு, ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்களைத் திருவிழாவாகக் கொண்டாடி 365 நாட்கள் கொண்ட ஆண்டுக் கணக்கை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள்.

“அந்தக் கணக்கிலும், ஓர் ஆண்டில் கால் நாள் பொழுது விடுபட்டுப் போகிறது. நாம் ஓர் ஆண்டுக்குக் கால்நாள் கூட்டவேண்டும். அதை ஒரேயடியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முழு நாளாகக் கூட்டிவிட்டால் என்ன?” என்று இஸ்பிகாரி கேட்டான்.

“நான்கு வருடங்களுக்கோ, அல்லது நாற்பது வருடங்களுக்கோ மட்டும் பயன்படக்கூடிய பஞ்சாங்கத்தை நாம் தயாரிக்கவில்லை. வரப்போகின்ற நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும், உலகம் உள்ள அளவும் ஓடுகின்ற காலத்திற்கும் ஓர் அளவு கருவியாகப் பயன்படும்படி இருக்க வேண்டும் நம்முடைய பஞ்சாங்கம்! அதற்கு இது வரையில் நாம் செய்த ஆராய்ச்சிகள் போதாது. இன்னும் துல்லியமாகக் கணக்குச் செய்யவேண்டும். மீண்டும், நாம் மனநிறைவு பெறுகிற வரையிலே தினந்தோறும், கால அளவுகளைக் கவனித்துக் குறித்துக்கொண்டு வர வேண்டும்” என்று உமார் கூற, மைமனும்