பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219


தூக்கிக் காண்பித்தான். அவனுடைய இடுப்பிலே சிறிய துணி கட்டப்பட்டிருந்தது. அவனை அப்படியே முதுகுப்புறம் திருப்பிக் காண்பித்தான். உடலிலே எந்தவிதமான பழுதும் இல்லை என்பதைக் கூட்டத்தினருக்குத் தெரியப்படுத்தினான்.

ஆனால், ஏராளமான அடிமைகள் கொண்டு வந்து சந்தையிலே அடிக்கடி விற்கப்படுவதால் விலை குறைந்திருந்தது. இன்னும் போர்க்களத்திலிருந்து வழியில் வந்து கொண்டிருக்கும் அடிமைகள் வந்து சேர்வதற்கு முன்னால், கையிருப்பை விற்றுத்தீரவேண்டிய நிலைமையும் இருந்தது. அந்தக் கிரேக்க அடிமையின் வெள்ளிய தோலின் ஊடே அவனுடைய எலும்பு வரிசை காட்சியளித்தது. அரைப் பட்டினி யாகக்கிடந்த அவன் அவ்வளவு தூரம் மெலிந்திருந்தான். யார் என்ன விலைக்கு வாங்கினாலும் உடனடியாக ஏதாவது தின்னக் கிடைத்தால் போதும் என்றிருந்தது அவனுக்கு.

“குதிரையை இதைக் காட்டிலும் அதிகமான விலைக்கு வாங்கினாலும் பலனுண்டு. இந்தப் பலமில்லாத இளைஞன் எதற்குப் பயன் படுவான்? அவனுக்கு நம் மொழியும் தெரியாது. எடுபிடி வேலைக்குக்கூட இந்த வயதில் இவன் பயன்பட மாட்டானே? பதினொரு பொன் தருகிறேன்” என்று ஒரு பருமனான பாரசீகன் கூட்டத்திலிருந்து முன்வந்தான்.

“பதினொன்றா? ஐயோ அல்லா இந்த மத விரோதி இல்லையில்லை - இந்த முஸ்லிம் இளைஞனுடைய உடலில் நல்ல இளம் ரத்தம் ஓடுகிறது. ஒரு மாட்டின் மதிப்புக்கூட இவனுக்கு இல்லையா? கனவான்களே, வெறும் பதினொரு பான்னுக்கு இவன் விலையாவது உங்களுக்குச் சம்மதந்தானா?”

“இந்தக் கிரேக்கச் சிறுவனைக் காவலுக்கு வைத்துக் கொள்ளலாமென்றால் ஈட்டியைத் தூக்கக்கூடிய பலம்கூட இருக்காது போலிருக்கிறதே! சரி பரவாயில்லை, பனிரெண்டு பொன்கள்!” என்றான் மற்றொரு வியாபாரி.

“பனிரெண்டு பொன் - இரண்டு பணம்” என்று குறுக்கிட்டது இன்னொருவன்.

தன்னுடைய முதல் ஏலமே இவ்வளவு மோசமாகப் போவதை எண்ணி ஏலவியாபாரி எரிச்சல் பட்டான். “நீங்கள்