பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

279

யெழுப்பிக்கொண்டு சென்றன. அவர்களுடைய பாதை திடுமென்று திரும்பியது, செங்குத்தான ஒரு பாறையின் குறுக்காக ஏறிச்செல்வதுபோல் தோன்றியது. கீழே வெகுதூரத்திலே, பாறைகளின்மேல் அந்த ஆறு பாய்ந்து செல்லும் பேரோசை பேட்டது. கனமான காற்றுச்சூழல்கள், உமாரின் தளர்ந்த கால் சாராய்க்குள்ளே புகுந்து வீசின.

உமார் தன் முழங்கால்களை நெருக்கிக் கொண்டு குதிரையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். ஒன்றுமில்லாத வெட்ட வெளியில் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. அவனைச்சுற்றி விளக்குகள் பளிச்சிட்டன. அவனுடைய குதிரை தடுமாறி நின்றது. ஒரு பெரிய கதவின் இருப்பு முட்டுக்கள் கிரீச்சிட்டன. அவனுடைய பின்புறத்திலே, இரும்பு அடிக்கிற சத்தம்கேட்டது. அவனுடைய கண்கட்டை ஒரு கை அவிழ்த்து விட்டது.

சிறிதுநேரம், விளக்கின் வெளிச்சம் அவன் கண்ணைக் கூசச் செய்தது. பிறகு தன் தலைக்குமேலே நட்சத்திரங்கள் இருப்பதையும், தன்னைச் சுற்றிக் கோட்டைச் சுவர் இருப்பதையும் கண்டான். அக்ரோனோகம், வழியில் அவனுடன் வந்தவர்களும் மறைந்து போய்விட்டார்கள். சிரித்த முகத்துடன் ஒரு கரிய சிறுவன், குதிரைக் கடிவாளத்தைப் பிடித்திருந்தான். சிவந்த பட்டுச்சட்டை அணிந்திருந்த ஒரு சிறிய மனிதன் அவனுக்கு சலாம் செய்தான்.

“தலைவரே! தங்கள் வருகை அதிர்ஷ்டம் உடையதாகுக! நான் கெய்ரோ ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்தவன். ரக்கின உட்டின் என்பது என்பெயர். அறியாமை மிக்க நான், தங்கள் அறிவுநூல்களைக்கற்று மகிழ்ந்திருக்கிறேன். தயவு செய்து கீழே இறங்கித் தங்கள் அறைக்கு வந்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்!” என்று அந்தச் சிறிய மனிதன் வரவேற்றான்.

களைத்துச் சோர்ந்துபோய் இருந்த உமார், தனக்கு வழிகாட்டிச்சென்ற அவன் பின்னால், ஒரு சிறு கதவு வழியாக, கல்பதித்த நடைபாதை வழியாகச் செல்லவேண்டியிருந்தது. இரவுநேரம் ஆகையால் ஆள் நடமாட்டமற்று அந்தப் பாதை