பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

295

பெருமைப்பட்டுக் கொண்டான். ஆனால், அவனுடைய மனம் இந்தத் தர்க்கவாத நிலையிலிருந்து திடீரென்று அலுத்துக் கொள்ளத் தொடங்கியது. அவன் தன் விருப்பம் இல்லாமலே, சிங்கத்தின் அருகில் நிற்பதைவிட்டுக் கிளம்பி, ஒரு நீர்க்குளத்தை நோக்கிச் சென்றது. வெள்ளிய தாமரைப் பூக்கள் அதன் மேற்பரப்பை மறைத்துக் கொண்டிருந்தன. ஒரு வெள்ளை நிறம் கொண்ட அன்னம் தூரத்திலே நீந்திக் கொண்டிருந்தது. அது, தன் தலையை இறக்கைக்குள்ளே வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது.

பிறகு, தோட்டத்திற்குள்ளே ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்தான். நிலவுத் தோட்டத்திலே வானம்பாடி புகுந்து பாடுவதுபோல் இருந்தது. ஆனால் அது வானம்பாடியல்ல ஓர் இளம்பெண்தான் பாடிக்கொண்டிருந்தாள். அவள் பாட்டோடு வீணையின் ஒலியும் இழைந்து வந்தது.

அவனை உண்மையில் வரவேற்றது நீரின்மேல் இருந்த வீடுதான். ஒரு வேளை அது மிதக்கிறதோ அல்லது நீர்க்குளம் ஏற்படும்போதே கட்டப்பட்டு விளங்குகிறதோ தெரியவில்லை. எப்படியிருந்தால் என்ன? அதோ அழகாக இருக்கிறது. அதற்குப் போகும் வழிமட்டும் தெரியுமானால்...!

கொடிகள் அவன் காலைப் பின்னிக் கொண்டு தடுமாறச்செய்தன. அவன் கீழே விழுந்தான். அதோ மரங்களுக்கெல்லாம் கீழே ஒரு விந்தையான ஒளியில்லாத நிலவு ஒன்று இருக்கிறது. கொடிகள் அவன் காலைப் பின்னிக்கொண்டன. அவன் சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் அங்கேயே கிடந்தான்.

அவன் தன்னைச் சுற்றியுள்ள கொடிகளை அகற்றிக்கொண்டு நீர்க்கரையோரமாக வந்தான். ஒரு சிறிய குறுக்குப் பாலம் இருக்கக் கண்டான். அந்தப் பாலத்தின் மறுமுனையில், அந்த வீடு அல்லது படகு இருந்தது. நீர் நடுவில் கவர்ச்சிகரமாக விளங்கிய அந்த வீட்டுக்குச் செல்ல அவன் விரும்பினான். விஞ்ஞான ஆராய்ச்சிக்காகப் போகாவிட்டாலும், தன் மன எழுச்சிக்காக அவன் அங்கே போவதை முக்கியமாகக் கொண்டான்.

பாலத்தின் மீது செல்லும்போது பாதிவழியில் அவன் கீழே குனிந்து பார்த்தான். தன் நிழல் தண்ணின் மேல் நடந்து