பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


"கோபம்வர சமய சந்தர்ப்பம் உண்டு. ஏதோ அவா ஆசைக்குச் சொல்லியிருக்கா. உனக்கு இஷ்டமில்லைன்னா, முக தாட்சண்யம் தட்டாமல் ஒரு பத்து நாளைக்கு இருந்து விட்டு ஆம்பிடையாளையும் அழைத்துக்கொண்டு வந்துடேன்!"

"முடியாது? பெண்ணை நம்மோடு ஊருக்கு அனுப்புகிறார்களா இல்லையா என்பதைத் தெரிஞ்சுண்டு வா போய்" என்று சீறினான் சுவாமிநாதன்.

எதிர்பாராதவிதமாகப் பிரணதார்த்தி அங்கே பிரசன்னமாகிக் கொண்டே, "அடடா! மாப்பிள்ளைக்கு என்ன இவ்வளவு கோபம் சம்பந்தியம்மா? ஏதோ ஈசுவர கிருபையிலே ஏழுதலைமுறை காணும்படி இருக்கிற வீடு. மாப்பிள்ளை சம்பந்திகள் எல்லோருமே இங்கேயே இருக்கலாம் என்கிற நினைப்பில் பிரஸ்தாபம் செய்தது நிஜம்தான்..." என்றார்.

சுவாமிநாதன் புயலாக தாயின் பக்கம் திரும்பி, "கேட்டுக் கொண்டாயா? ஜாதகம் கொடுக்கிறபோது நான் என்ன சொன்னேன் நினைவிருக்கிறதா உனக்கு?" என்றான்.

நாகசாமி குறுக்கிட்டு, "சாமா வார்த்தையை ரொம்பச் செலவழிக்காதே. பேசாமலிரு. யோசிப்போமே!" என்றார், நிலைமையைச் சமாளிக்க.

பிரணதார்த்தி கர்வத்துடன் தலை நிமிர்ந்தார். "சம்பந்திவாள் லோகசகஜமான உத்தேசம்தான் நான் பண்ணினதும். ஒரே பெண் என்று இருக்கிறவா, மாப்பிள்ளையை ஆத்தில் வைத்துக் கொண்டு, ஆசை, அருமைகளைக் கொண்டாடி சந்தோஷப்பட்டு கண்ணால் பார்க்கணும் தான்-"

"ஊம் அதற்கு என்று ஏழை குமாஸ்தாவின் பிள்ளையாகப் பார்த்துப் பிடித்தீராக்கும் பாவம். இஷ்டமிருந்தால் பெண்ணை அனுப்பும். இல்லாவிட்டால் வைத்துக்கொள்ளும்; உம் சொத்தும் வேண்டாம், சுகமும் வேண்டாம்! மனிதனுக்கு மானம், மரியாதைதான் முக்கியம். அதைக்கொண்டு எனக்கு பிழைத்துக் கொள்ளத் தெரியும்..."