பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிவு

பொருள்களின் வளர்ச்சியால் உலகில் உயிர் தோன்றிய விதத்தை நாம் விரிவாகத் தெரிந்து கொண்டோம். செஞ்சூட்டுப் பக்குவத்திலுள்ள வானக் கோளங்களின் மேற்பரப்பில், கரி அணு ரூபத்தில் பிரிந்து கிடக்கிறது. உலகின் மேற்பரப்பில் கரி, கரி நீரகக் கூட்டுப் பொருள்களாக மாறிற்று. காலப் போக்கில் இப்பொருள்கள், ஆக்சிஜனோடும், நைட்ரஜனோடும் சோர்ந்து அவற்றின் அடிப்பொருள்களாக மாறின. அவைகள் மிகவும் சுலபமான அமைப்புடைய சேதனப் பொருள்கள், புராதனக் கடல் நீரில் இவை சிக்கலான அமைப்புடைய பொருள்களாக மாறின. புரதங்களும், வேறு பொருள்களும் தோன்றின. தாவரங்கள், விலங்குகள் இவற்றின் உடல்களை ஆக்கும் சேதனம் இவ்வாறு உண்டாயின. முதன் முதலில் இவை கடலில் கரைந்திருந்தன. பின்னர் கோயசர்வேட் துளிகளாக வெளிப்பட்டன. முதன் முதலில் தோன்றிய இத்துளிகள் சுலபமான அமைப்புடையவை. பின்னர் இவற்றினுள் மாறுதல்கள் நிகழ்ந்தன. அவை சிக்கலானதும், முன்னிருந்ததைவிடச் சிறந்ததாகவும் உள்ள அமைப்பைப் பெற்றன. அத்தகைய அமைப்பைப் பெற்ற உருவங்களே உலகின் மூல உயிர்களாக மாறின.

உயிர் வளர்ச்சியுற்றது. மூல உயிர்களுக்கு ஜீவ அணு வடிவமில்லை. உயிரின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஜீவ அணு தோன்றியது. ஒற்றை அங்க உயிர்களும் பல அங்க உயிர்களும் உலகில் நிலைபெற்றன. உயிர்ப் பிராணிகளின் தோற்றத்துக்கு ஆத்மாவோ அல்லது கடவுளோ காரணமென்ற கொள்கையை மேற்கூறிய காரணங்களால் விஞ்ஞானம் மறுக்கிறது.