சபாரத்தின முதலியார் மற்றத் தந்தையரைப் போல் குறுகிய மனோபாவ முடையவரல்லர். அவர் பெண்களுக்கு எல்லா விஷயங்களிலும் சரிசமத்துவமாக சுதந்திரம் அளிக்க வேண்டுமென்ற எண்ணமுடையவர்தாம். ஆனால் கலியாணத்தின் போது கற்பகத்தின் அபிப்பிராயத்தை கேளாதது மங்களத்தின் சூழ்ச்சியும் அவசர ஏற்பாடும் ஒருபுறமிருக்க, மாப்பிள்ளையின் அழகு, உயர்தரக்கல்வி, அந்தஸ்து, முதலியவை அவருக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டதுதான்; கற்பகத்திற்கும் இம் மாப்பிள்ளை பிடிக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டார். இவ்வளவு தூரம் அவர் மாப்பிள்ளை வீட்டார் மீது வைத்திருந்த நல்லபிப்பிராயத்தைத் தாலி கட்டுவது சம்பந்தமாக அவர்கள் எழுப்பிய தகராறு போக்கி விட்டது.
தாலி கட்டுவது கூட பெண்களை அடிமைப்படுத்தும் சின்னமாகும் என்று கருதும் தீவிரமான சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையுடைய கூட்டத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை சந்திரசேகரன். கற்பகம் நடராஜன்பால் காதல் கொண்டிருக்கிறாள் என்று அறிந்ததும், அவளுக்கு விவாக விடுதலையளிக்க முன் வருகிறான்.