பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9

பெண்கள் மருத்துவமனையிலும் எழும்பூர் மகளிர் பொது மருத்துவமனையிலும் பின்னர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் சிறப்பாகப் பணியாற்றியவர். மகளிர் மருத்துவத் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் செயலாற்றியவர். பணி ஓய்வு பெற்ற பின்னரும், தாம் அனுபவம் பெற்ற துறையில் ஈடுபாடு கொண்டிருப்பவர். என் நூலுக்கான தகவல்கள் வேண்டி அவரை அணுகியபோது மகிழச்சியுடன் நேரம் ஒதுக்கித் தந்து, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். என் ஐயங்களை விளக்கித் தெளிவுபடுத்தினார். பின்னர் நான் கோரியதற்கிணங்க அதிகப் பழக்கம் இல்லை என்று தயங்கினாலும், தமிழிலேயே ஒர் அரிய அணிந்துரையும் வழங்கியுள்ளார். இந்தச் சிறப்பு மருத்துவருக்கு சஞ்சீவினி ஆயுர்வேத யோகா சிகிச்சை மைய நிறுவனர், டாக்டர் பி.எல்.டி. கிரிஜா, டி.எம். முகுந்தன், மங்கல மகப்பேறு குறித்த செய்திவிவரங்கள் நூலில் சேர்க்க அனுமதி வழங்கியுள்ளர்கள். அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகிறது.

    நூல்...நூல்.. எழுதியாயிற்று. சிக்கல்கள் அதிகம். வெளியிடுவோரைத் தேடும் சங்கடம் எனக்கு இல்லை. சுமார் அரை நூற்றாண்டுக்காலமாக என் நூல்களை வெளியிடும் நிறுவனமே இந்த நூலையும் வெளியிடுகிறது.
    தமிழ் நூல்களைப் பதிப்பிப்பவர்களில் தரமும், நேர்மையும், துணிவும், நாணயமும் கூடிய கொள்கைப் பதிப்பாளர், எழுத்தாளர் தேச விடுதலைப் போராளி கண.முத்தையா அவர்கள் தோற்றுவித்த தமிழ்ப் புத்தகாலயம், அன்றிலிருந்து இன்று வரை, அவருடைய வழித் தோன்றல்களான திருமதி மீனா - அகிலன் கண்ணன் ஆகியோரால் அதே மரபுடன் இயங்கி வருகிறது. அவர்களே இந்த நூலுக்கும் பொறுப்பேற்று வெளியிடுகிறார்கள். செல்வி - உமா கண்ணன் - அட்டைப்படம், புத்தக வடிவமைப்பு ஆகியவற்றின் பொறுப்பை நேர்த்தியாக வழங்கியுள்ளார். சமுதாயத்தில் இந்நாள் பாதிக்கப்பட்டவரின் குரலாக ஏற்று, வாசகப் பெருமக்கள் இந்த நூலைப் பயனுடையதாகச் செய்ய வேண்டுகிறேன்.

நன்றி! வணக்கம்.

ராஜம் கிருஷ்ணன்