பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மகப்பேறு, மகளிர் நோயியல் மருத்துவர் ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் ஆர்.வசந்தா அவர்களின் அணிந்துரை இந்த நூலில் ஆதிகாலத்திய பெண்ணின் நிலையிலிருந்து தற்காலப் பெண்ணின் அவலமான நிலைவரை, ஆசிரியர் உணர்வுபூர்வமான கட்டுரைகளாக எழுதியுள்ளார். தன் சொந்தக் கருத்துகளுடன் பலவகைப்பட்ட அறிஞர் நூல்களில் இருந்து பெற்ற ஆய்வுப்பூர்வமான கருத்துக்களையும் வேறு பல புள்ளி விவரங்களையும் தொகுத்து எளிய நடையில் அளித்துள்ளார். இது சாதாரணமான முயற்சி அல்ல. பெண்ணின் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் மருத்துவ ரீதியில் அணுகப்படுகிறது. தன் உடலைப் பேணுவது அவளுக்கு அவசியமாகிறது. ஏனெனில் கருத்தரித்து மகப்பேறு பெறுபவள் அவள். உடல் நலிவடையாமல் இருப்பதுடன், கருத்தடை செய்து கொள்ள வேண்டியவளாகவும் இருக்கிறாள் இன்று. இந்த நூலில் மகளிர் நலம் பேணும் முறையில் இவை எல்லாவற்றையும், பல்வேறு கருத்தடை முறைகளின் சாதக பாதகங்கள் பற்றியும் கோர்வையாக எழுதியிருப்பது பாராட்டுக் குரியதாகும். பெண்களுக்கு இந்த விவரங்களனைத்தும் மிகவும் பயன்படக்கூடியவையாகும். இந்தக் கட்டுரைகளின் இடையே சிறுசிறு உண்மைச் சித்திரங் களை, நிகழ்வுகளை மனதில் பதியும் வண்ணம் எழுதியுள்ளார். அரசியல் ரீதியான சில நடவடிக்கைகள், சில அதிகாரிகளின் மகளிருக்கு எதிரான நலம் விளைவிக்காத மருத்துவங்கள், இங்கே சுட்டிக் காட்டப்படுகின்றன. நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஆக்கப்பூர்வமான திட்டங்கள் என்பவை மகளிர் நலத்துக்கும் உரிமைகளுக்கும் எதிராக இருந்திருப்பதை நன்கு எடுத்துக்காட்டி யிருப்பதுடன் சாடியும் இருக்கிறார்.