பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. துறவும் தாய்மையும் சமுதாய உற்பத்தியானாலும் உணவு உற்பத்தியானாலும் பெண்ணின் பங்கேற்பு மிக முக்கியமானது. ஆக்கிரமிப்பும், உரிமை மறுத்தலும் தூலமாகக் காட்டப் படவில்லை. என்றாலும், வேதம் பெண் மறுக்கும் துறவு நெறியைக் காட்டவில்லை. பவுத்தம், சமணம் ஆகிய மதங்களோ, பெண் வெறுப்புத் துறவை உயர்த்தின. பெண் போகமே பாவம் என்ற கருத்தில் கிறித்தவம் ஆண், பெண் கூடலையே புனிதத்துக்கு ஒவ்வாததாகக் கற்பித்துத் தூய கன்னிமையில் உதித்த மைந்தராக இயேசுவை (அயோனிஜர்) உலகுக்கு அறிவிக்கிறது. மனைவியும் மகனும் மனிதனின் ஆன்மிக உயர்வுக்குத் தடைகள்: உலகின் அனைத்துத் துன்பங்களுக்கும் ஆசையே காரணம். ஆசைகள் அறுபட வேண்டுமாயின் பெண் பந்தம் தவிர்க்க வேண்டும்... சமணமும், பவுத்தமும் நாட்டில் வேதமங்களுக்கு, வேள்விப் பலிகளுக்கு எதிராகச் செல்வாக்குப் பெற்றபோது தான் சங்கரர் தோன்றுகிறார். 'மனைவியார்? மக்கள் யாவர்? சம்சாரம் என்பது மாயை' என்று அறிவுறுத்திய சங்கரர் இளமையில் துறவு நெறியேற்றார். இந்த சங்கரர் மரபு இந்தியப் பெண்களைச் சிதையேற்றவும் கைம்மைக் கொடுமைகளை இழைத்து அவர்களை உயிரோடு வதைக்கவும் வழியமைத்தது. பெண்களைத் துறவுச் சங்கத்தில் புத்தர் சேர்க்க மறுத்தார். அவருடைய தாயும், மற்ற நிராதரவான பெண்களும் (எல்லைப் போரில் காப்பாளரை இழந்தவர்கள்) புத்த சங்கத்தில் சேரத் தவம் கிடந்தனர். அவர் சீடர் ஆனந்தர் பல நாட்கள் வேண்டிப் பரிந்துரைத்ததன் பேரில்தான் அவர்கள் துறவுச் சங்கத்தில் சேர அனுமதி பெற்றனர். என்றாலும், ஆடவரான துறவிகளுக்கும் இவர்களுக்கும் சமமான நிலை கொடுக்கப்படவில்லை. சமணத்திலும், பெண் துறவியருக்கு இடம் இருந்தது. இதைப் பின்பற்றியே சங்கர மரபு, சதிக்கொடுமையில் இருந்து