பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொடக்கக் காலம்

உணர்ச்சி வெளியீட்டிற்கு ஏற்ற மொழியுருவம் கவிதை. சிந்தனை வெளியீட்டிற்கும் நாவல் கதைகளில் மனப்படிமங்களை வெளியிடுவதற்கும் ஏற்ற கருவி உரைநடை. இவற்றுள் முதலில் தோன்றியது கவிதை பின்னர் தோன்றியது உரைநடை
பின்னர் தோன்றியதாயினும், சில சமுதாயங்கள் தங்கள் வளர்ச்சிப்போக்கில் கவிதையைவிட உரைநடையைப் போற்றி வளர்த்துள்ளன. அறிவியல் சிந்தனைகளையும் தத்துவச் சிந்தனைகளையும் வரலாற்றுண்மைகளையும் வெளியிடும் உரைநடை நூல்களை அச்சமுதாயங்களில் வாழ்ந்த அறிஞர்கள் படைத்துள்ளார்கள். பண்டைக் கால கிரீசும் சீனாவும் இத்துறையில் முன்னேறியிருந்தன. வரலாற்றுத் தத்துவ நூல்கள் பண்டைக் கால முதல் கிரீசிலும் சீனத்திலும் தோன்றியுள்ளன
தமிழிலே உள்ள பண்டைக்கால நூல்கள் எல்லாம் செய்யுள் வடிவிலேயே எழுதப்பட்டவைதாம். அவை நீதியையும் தர்மத்தையும் போதிக்கும் நூல்கள்தாம். பண்டை மக்கள்.வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் எடுத்துக்காட்டும் நூல்களும் இருக்கின்றன. பொழுது போக்குக்காகப் படித்துச் சுவைக்கக்கூடிய கதைகளும், கற்பனைகளும் நிரம்பிய நூல்களும் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் இப்படித்தான் அமைந்திருக்கின்றன. -
இவ்வாறு சாமி சிதம்பரனார் வசன இலக்கியம் வளர்ந்த விதம்’ என்ற தமது கட்டுரையில் கூறுகிறார்

பண்டைக் கால உரைநடை நூல்கள் நமக்குக் கிடைக்க வில்லையாயினும், பண்டைக் காலத்திலேயே உரைநடை தோன்றிவிட்டது என்பதைக் காட்டும் சான்றுகள் கல்வெட்டு ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளன. தமிழ் உரைநடையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றி அறிய அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.