பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

உரைநடை வளர்ச்சி


தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

(236)

பரிமேலழகர்-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அக்கணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று என்றவாறு. "புகழ் ஈண்டு பெயர். அஃதிலார் என்றமையின்; மக்களாய்ப் பிறவாமை என்ற அருத்தாபத்தியான் விலங்காய்ப் பிறத்தல் என்பது உம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் நன்று என்றார்.

மணக்குடவர்-பிறக்கின் புகழுண்டாகப் பிறக்க, அஃதிலார் பிறக்குமகின் பிறவாமை நன்று என்றவாறு. இது புகழ்பட வாழவேண்டும் என்றது.

பரிதியார்-பிறந்தால் புகழுடனே வாழவேணும். அந்த நெறி யில்லாதார் பிறப்பதிற் பிறவாமலிருப்பதே நன்று என்றவாறு

காலிங்கர்-ஒருவர் தம் புகழ் பரப்புவதாகப் பழியினை நீக்கிப் புகழ் பெறுதலே தோற்றமாவது; அஃதிலார் நானிலத்தின் கண் தாம் ஒரு மக்கள் உருவு கொண்டு தோன்றுதலின் இறந்தபடுதலே பெரிதும் நன்மையுடைத்து என்றவாறு.

மேற்கூறிய விமரிசனம் இவ்வுரைகளுக்கும் பொருந்தும்.

சமய நூல் உரைகள்

தர்க்கரீதியான விவா தங்களுக்குப் பொருத்தமான உரைநடை நீலகேசியிலும் மற்றைச் சமண நூல்களிலும் காணப்படுகிறது. சைவ சமய உரைநூல்களும் விவாத நடையைப் பயன்படுத்துகின்றன. இந்நூல்களில், பரபக்க நிராகரணமும் சுபக்க ஸ்தாபனமும் ஆகிய இரு பகுதிகள் இருக்கின்றன. முதலாவது எதிரிகள் கருத்தைத் தகர்ப்பது. இரண்டாவது தன் கருத்தை நிறுவுவது.

இரண்டினுக்கும், எதிரி கருத்துக்களைக் கூறும் நூலறிவும் தன் பக்கம் கூறும் நூலறிவும் இருத்தல் வேண்டும். அதனோடு அளவை நூல் பயிற்சியும் வேண்டும். இவ்வுரைகள், தத்துவக் கருத்துக்களைத் தருக்க முறையில் மறுக்கவும் நிறுவவும் ஒரு தனியான உரைநடையைக் கையாளுகின்றன. இதனைத் தத்துவ விளக்க நடையென்று கூறலாம்.