பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

35


கூறும் பகுதிகள் செய்யுள் நடையில் இல்லாமல் உரைநடையிலேயே உள்ளன.

சோழன் பூர்வ பட்டயம் என்பதும் சோழர் வரலாற்றைப் புராணப் பாங்கிலும் மிகை நவிற்சியாகவும் கூறுகிறது. பேச்சு வழக்கைச் சிறிது மாற்றிச் செந்தமிழும் கருந்தமிழும் கலந்து எழுதப்பட்டது. இதில் பல ஊர்களின் பெயர்கள், அதிகாரிகளின் பெயர்கள், போர்களின் செய்திகள் முதலியன கூறப்பட்டுள்ளன. சோழர் வாழ்ந்த காலத்தில் அல்லாமல் மிகவும் பிற்பட்ட காலத்தில் தோன்றிய நூல் இது.

இவ்விரண்டு நூல்களும், வரலாற்று நூல்கள் என்ற நிலை யில் பல குறைபாடுகள் உடையனவாயினும், தமிழ் நடை வளர்ச்சியில், ஒரு முக்கியமான கட்டத்தைக் குறிக்கின்றன. தமிழரது வரலாற்றுணர்ச்சிக்கும் வரலாற்று வெளியீட்டுத் திறனுக்கும் இவை சான்றுகளாக உள்ளன.

நாட்டார் கதைகள்

ஆயினும் நாட்டில் அந்நாளிலிருந்த குழப்ப நிலையில் பல நூல்கள் தோன்றுவதற்குச் சாதகமான நிலைமை இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரசியல் குழப்ப நிலை முடிவுற்று அமைதி நிலை தோன்றியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடக மேடைக்காகப் பல தெலுங்கு நாட்டுக் கதைகள் உரைநடையில் எழுதப்பட்டன. மதனகாமராசன் கதை, விக்கிரமாதித்தன் கதை, மரியாதைராமன்-தெனாலிராமன் கதை முதலியன நாயக்கர் ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டில் அறிமுகமாகியிருந்தன. இவை தெலுங்கு, மராட்டிய நாட்டுக் கதைகள். இவை தமிழில் நாட்டார் கதைத் தாக்கம் பெற்று மாறுதல்களுடன் நூல்களாக அச்சேறின.

தமிழ்நாட்டுக் கதைகளான தூக்குத்துக்கி கதை, நல்லதங்காள் கதை, கோவலன் கதை, வள்ளி திருமணம் முதலிய கதைகள் நாடகங்களாக எழுதப்பட்டன. இவை பொதுமக்களிடம் பரவின. மேற்கூறிய நூல்களின் உரைநடை பேச்சு வழக்குக்கு நெருக்கமாக இருந்தது.

இதே காலத்தில் புலமை பெற்றோர் தெய்வங்களின் மீது பிள்ளைத்தமிழும் உலாக்களும் பாடிக் கொண்டிருந்தார்கள். உரைநடையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அரைகுறைப் படிப்புடையவர்கள் இப்பாமர வசன நூல்களை எழுதினார்கள். எனவே, இவை இலக்கியச் சுவையில் தாழ்ந்து காணப்படு