பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள் . 159

நீதிமன்றத்தில் அறிவைத் துணைக்கழைத்தோம். இன்று சிறையிலிருந்து ஒடக் கோழைத்தனத்தைத் துணைக்கழைக்கச் சொல்கிறீர்கள். நமக்குக் கெடுதல் செய்த ஒருவனுக்கு பதில் கெடுதல் செய்து, பழிக்குப்பழி வாங்குவது சரியல்ல என்ற கொள்கையில் நின்று, நாம் நமதுஆராய்ச்சியை ஆரம்ப முதல் செய்து வந்திருக்கிறோம். இப்போது ஏதன்ஸ் நீதிமன்றம் நமக்குக் கெடுதல் செய்யும் நோக்கத்தோடு மரண தண்டனை விதித்திருந்தால் அதைக் கண்டு நான் தப்பியோடுவது அதைப் பழிவாங்குவதாகாதா? அப்படிச் செய்து நீதிமன்றத்தைத் தலைகுனியச் செய்யலாமா? நம்மால் கண்ணியப்படுத்தப்பட வேண்டிய நீதிமன்றத்தை நாமே சிதைத்துவிடலாமா? தாயே தான் ஈன்ற சேயைக் கொல்வதைப் போன்றதல்லவா இந்தச் செய்கை.

கிரீடோ : அதைப் புரிந்துகொள்ளாத மனிதர்களிடம் நாம் சரணுகதி அடைவதா? .

சாக்ரடீஸ் : தோல்வியை ஒப்புக்கொள்ள பெரும் பண்பு வேண்டும். இது சரணாகதியல்ல; வீரம். தோல்வி வெற்றியின் முதல்படி. எவன் தைரியமாகத் தன் தவறுகளை ஒப்புக் கொள்ள முன்வருகிறானே அவனே நல்லவர்களின் முன்னோன். நீர் நினைப்பதைப் போல் நான் ஓடிவிட்டால், நீதிமன்றத்தில் நான் பேசிய அறம், நேர்மை எல்லாம் காட்டில் காய்ந்த நிலாவாகிவிடும்.

கிரீடோ : நீதி எங்கே இருக்கிறது? அநீதிதானே நீதி மன்றத்தில் கோலோச்சுகிறது? அந்த அநீதியை எதிர்த்துப் போராட உங்களை விட்டால் கிரேக்கம் இன்னொரு மேதையை எங்கே காணப்போகிறது? உலகம் ஒரு அறிஞரை இழந்து விடுமே. என் நாடு ஒரு மேதையை அநியாயமாகக் கொன்று, பழிச் சொல்லை வரலாற்றில் ஏற்று, களங்கப்பட்டுப் போகுமே என்பதற்காக அஞ்சுகிறேன். ஆற்றலின் குன்றே தர்க்கவாத கேசரியே! கிரேக்கத்தின் ஞானக் களஞ்சியமே! இன்றே சிறைச்சாலையை விட்டு வெளியேறுங்கள். நீங்கள் மறைந்தால் மானிட வர்க்கத்தின் விலை மதிக்க முடியாத மாணிக்கமாகிற