பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 உலகைத் திருத்திய

      “அப்படியே செய்கிறேன், நண்பரே” என்று சொல்லிக் கொண்டே, கோப்பை நஞ்சை மடமடவென்று குடித்து விட்டார். கூடியிருந்த நண்பர் குழாம் வேதனைக் குரலோடு கதறியது. சிறைக்கு வெளியே சாக்ரடீசின் நண்பர்களும் மக்களும் விஷம் அருத்திவிட்டார் என்ற செய்தி எட்டியதும் அடித்து மோதிக்கொண்டனர். கூடவே இருந்த இளைஞர்கள் சாக்ரடீஸ் என்ற தத்துவ ஆசான் மறைவை எண்ணி மனம் பொறுக்காமல் தற்கொலை செய்துகொண்டனர் பலர். ஏதென்ஸ் நகரம் கொந்தளித்தது. எங்கும் தீக்காடு. குற்றம் சுமத்தியவர்கள் பாதுகாப்பை நாடி ஓடினர். சிறைக்கதவுகளை நோக்கி மக்கள் வெள்ளம் படையெடுத்தது. நீதிமன்றம் தாக்கப்பட்டது. எத்தனையோ போர்க்களங்களைக் கண்ட ஏதென்ஸ் நகரம், தனக்குள்ளேயே ஏற்பட்ட எரிமலையைத் தாங்க முடியுமா என்று திணறியது. இறுதியில் சாக்ரடீசின் சவ ஊர்வலம், பெரும் திரளான மக்கள் வெள்ளம் கரைபுரண்டோட பவனிவந்து கல்லறையை அடைந்தது. அங்கே அறிஞனும் சாக்ரடீசின் முதல் மாணாக்கனுமான பிளேட்டோ உரையாற்றினான். கண்ணீர் பெருகியது. கல்லறை நனைந்தது.

பிளோட்டோ பேசுகிறான்

     “எனது ஏதென்ஸ் நாட்டு அருமை நண்பர்களே! அறிஞனை எரித்த கைகளோடு நிற்கிறோம். ஒரு நல்லவரை வீண்பழி சுமத்திக் கொன்றுவிட்ட குறைமதி படைத்த நாடு ஏதென்ஸ் என்ற சாபக் கேட்டை நம் தாயகம் பெற்றுவிட்டது. இனி அந்தச் சாபக்கேட்டைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையே நமது அறிவுக்கெட்டியவரை புலப்படவில்லை. நாம் சாவோம். சாகடிக்கப்பட மாட்டோம் என்ற துணிவில் யாருமே ஏதென்சில் வாழமாட்டார்கள் என்ற அறிவிப்பைத் தந்து சென்றவனின் கல்லறை முன்னே நிற்கிறோம். நேற்றிருந்தான். இன்று வெந்து நீரானான், நாளை யாரோ என்ற அச்சத்துக்கிடையிலே வாழுங்கள் என்று சொல்லாமல் சொல்லிச் சென்று விட்டான், சொற்செல்வன்.