பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



4. ஒலிம்பிக் பந்தயப் போட்டிகளில் பங்கு பெற எந்த விதமான வயது வரம்பும் கிடையாது. விரும்புகிற. எல்லோருமே போட்டியிடலாம்.

ஒலிம்பிக் பந்தயங்கள் எவ்வாறு நடத்தப் படுகின்றன?

நடக்கும் முறை: ஒலிம்பிக் பந்தயங்கள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகின்றன. அந்த 4 ஆண்டுகளின் முதல் வருடத்தில் தான் பந்தயங்கள் நடத்தப்பட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்படக்கூடாது. பந்தயங்கள் நடைபெறும் நாட்கள் 16 நாட்களுக்கு மேல் போகக் கூடாது.

இடத்தை நிர்ணயிக்கும் முறை:

பந்தயங்களை நடத்த விரும்புகிற ஒவ்வொரு உறுப்பினர் நாடும், முன் கூட்டியே விண்ணப்பம் செய்துகொள்கின்றன. அகில உலக ஒலிம்பிக் கழகத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று கூடி, விண்ணப்பித்த நாடுகளின் பட்டியலைத் தொகுத்து, விண்ணப்பங்களைப் பரிசீலிக்கின்றன.

எந்த நாட்டில், நகரத்தில் பந்தயங்களை நடத்திட விண்ணப்பித்தவர்கள் விரும்புகிறார்கள் என்பதை, ஒலிம்பிக் கமிட்டியினர் அறிந்து, அந்தந்த தேசிய ஒலிம்பிக் கழகத்தினருடன், குறிப்பிட்ட அந்த நகரத்திற்குச்சென்று, பந்தயங்கள் நடத்திட அந்த இடம் பரிபூரணமான வசதிகளைப் பெற்றிருக்கிறதா என்றுஆய்ந்து பார்த்து, முடிவு செய்கின்றனர்.

பிறகு, உலக ஒலிம்பிக் கமிட்டியின் உட்குழுக்கள் எல்லாம், அதற்குரிய கடமைகளின் படி, குறிப்பிட்ட நகரங்களுக்குச் சென்று கண்டறிந்து, தங்கள் அறிக்கை களைத் தாக்கல் செய்யும்.