பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

உள்ளம் குளிர்ந்தது

எப்படியானாலும் மரணத்துக்கு மூலகாரணமாக உள்ள சக்தியைக் காலன் என்று சொன்னார்கள். அதற்குச் சிறிதும் அஞ்சாமல், திருவருளைத் துணையாகக் கொண்டவர்கள் இருப்பார்கள்.

அஞ்சாமைக்குக் காரணம்

ருணகிரி நாத சுவாமிகள் அந்தத் தைரியத்தைக் கொண்டவர். காலனுக்கு அஞ்சேன் என்று சொன்ன பிறகு அதற்குரிய காரணம் இன்னது என்று சொல்ல வருகிறார். மற்ற இடையூறுகள் வரும்போது உலகில் உள்ளவற்றைத் துணையாகக் கொள்ள முயல்கிறோம். அவை எல்லாம் மெய்த் துணையாக இல்லாமல் பொய்த் துணையாக மாறிவிடுகின்றன. அப்படியின்றி, பெரிய துன்பமாகிய மரண பயத்தைப் போக்குவதற்கு மெய்யான துணை எனக்கு இருக்கிறது என்று சொல்கிறார். முருகப்பெருமானுடைய வேலும், அஞ்சேல் என்ற திருக்கரமும் மெய்த் துணையாக உள்ளனவாம். சூலமும், பாசமும் ஆகிய இரண்டையும் கொண்டுவரும் காலனுக்கு எதிரே வேலும் திருக்கரமும் ஆகிய இரண்டும் உதவுகின்றனவாம்.

ஆலம் குடித்த பெருமான்

முருகனைப் பற்றிச் சொல்லும்போது அவன் சிவ குமாரன் என்று சொல்கிறார். யமனாவது ஒவ்வோர் உயிரையும் தனித்தனியே வேறு வேறு காலத்தில் கொண்டு போகிறான். அன்று ஒருநாள் பாற்கடலில் ஒரு பெரிய யமன் போன்ற பொருள் எழுந்தது. அதுதான் ஆலகால விஷம். அமுதத்தை உண்டு சாவாமல் வாழலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த தேவர்களுக்கு முன் அவர்களின் உயிரை ஒருங்கே குடிக்கும் நஞ்சு எழுந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களின் உயிரையும் ஒருங்கே போக்கும் வகையில் அது எழுந்தது. அந்தச் சமயத்தில்