பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

உள்ளம் குளிர்ந்தது

சொல்லிவிட்டார். ஆகவே தனியாக வேறு மனிதர்களைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேந்தர் என்றாலும் உபலட்சணத்தால் எல்லா வகையான மனிதர்களையும் கொள்ளலாம். விலங்கினங்களால் வரும் துன்பம் இல்லை என்பதை அடுத்தபடி சொல்ல வருகிறார். காட்டில் வாழ்கின்ற விலங்கினங்களால்தான் மனிதர்களுக்குத் துன்பம் உண்டாகும், புலி, கரடி, யானை என்பவை மனிதனைத் துன்புறுத்தும் விலங்கினங்கள். கந்தர் அலங்காரத்தைத் தெரிந்து கொண்டவர்களுக்கு அந்த விலங்கினங்களாலும் துன்பம் இல்லையாம்.

கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும்.

தமிழ் நாட்டில் சிங்கம் அதிகமாக இல்லையாதலால் அதைச் சொல்லாமல் புலி, கரடி, யானை என்று சொன்னார்.

கற்று அறிந்தவர்


ந்தப் பயனைப் பெறுகின்றவர்கள் யார்? கந்தர் அலங்காரத்தைப் படித்து, அதில் உள்ள செய்யுட்களை நன்றாக உணர்ந்து, அருணகிரியார் காட்டும் சாதனங்களைப் பயின்று, மனத்தை அடக்கி, பின்பு இறைவனுடைய திருவருளைப் பெற்றவருக்கே இந்தப் பயன் வரும் என்று சொல்லவில்லை. அலங்கார நூற்கவிகளில் ஒன்றையாவது நன்கு கற்று அறிந்தவருக்குக்கூட இந்தப் பயன் உண்டாகும் என்று சொல்கிறார்.

கந்தன் நன்னூல், அலங்காரம் நூற்றுள் ஒரு கவிதான்
கற்று அறிந்தவரே.

கந்தனுடைய அலங்காரம், நல்ல நூலாகிய அலங்காரம்: கந்தனைச் சொல்லாலே அழகு படுத்தும்நூலுக்குக் கந்தர் அலங்காரம் என்ற பெயர் வந்தது. இது நல்ல பயனைத் தரும். ஆதலால் நல்ல நூல் ஆயிற்று. இங்கே நூல் என்பது பனுவல் என்ற பொருளில் வந்தது